வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், “சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியினைப் புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் அவா்கள் ஈடுபட்டிருக்கிறார், தமிழ்ப் பண்பாடும் - விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு வெள்ளிடை மலையாக உணர்த்தி இருக்கின்றன. ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை” என குறிப்பிட்டுள்ளார். 






அதில் சனாதன போர்வைக்குள், சன்மார்க்க நெறியை புகுத்த நினைக்கிறார். ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட வேண்டியதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ வள்ளலார் 10 ஆயிர வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்துள்ளேன். அதேபோல் வள்ளலாரின் நூல்களை படித்த போதும் பிரமித்து போனேன்.  இங்குள்ள மக்களின் உடையும், தோற்றமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் உண்மை என்பது ஒரே கடவுள், அவன் படைத்த மனிதன், செடி, கொடிகள் எல்லாம் ஒரே குடும்பம். அந்த வகையில் என்னில் உன்னையும், உன்னில் என்னையும் காண்பது சனாதான தர்மம் தான். சிறு தெய்வம், பெரும் தெய்வம் வழிபாடு இருந்த போதிலும் சண்டைகள் இருந்ததில்லை.  ஆனால் புதிதாக வெளியில் இருந்து வந்த மதங்கள் என்னுடையது பெரியது என கூறுவது தான் பிரச்சினை. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நம் அடையாளம் அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள். 1852 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் சமூக கட்டமைப்பு அழிய வேண்டும் என எழுதிய கார்ல் மார்க்ஸ் ஆங்கிலேயருக்கு உதவினார்” என தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றுள்ளது.