அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி
அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதை தொடர்ந்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், செந்தில் பாலாஜியின் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பின்னர், உயர் நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.


"செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்னை"


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பீலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தனர். கடந்த நவம்பர் 20ஆம் தேதி நடந்த விசாரணையில், "செந்தில் பாலாஜிக்கு இதய பிரச்னை உள்ளதாகவும் அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவருக்கு தற்போது இடைக்கால ஜாமீனாவது வழங்க வேண்டும்" என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி கோரிக்கை விடுத்தார்.


செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கு இருக்கும் இதயக் குழாய் அடைப்புக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது அவருக்கு ஆபத்தாக முடியும் என்றும் வாதம் முன்வைக்கப்பட்டது. உரிய சிகிச்சை வழங்கவில்லை என்றால், செந்தில் பாலாஜி பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.


அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "செந்தில் பாலாஜிக்கு மருத்துவமனையில் அனுமதித்துதான் சிகிச்சை வழங்க வேண்டும் என்று மருத்துவ அறிக்கையில் கூறவில்லை" என வாதிட்டார். 


இரு தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், "அமைச்சர் செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கை உள்ளிட்ட மருத்துவ அறிக்கைகள் மற்றும் சிகிச்சை தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார். மேலும், விசாரணையை நவம்பர் 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.


ஆபத்தான நிலையில் இருக்கிறாரா செந்தில் பாலாஜி?


இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


எம்.ஆர்.ஐ பரிசோதனையில், செந்தில் பாலாஜியின் மூளையின் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்குப் பித்தப்பையில் கற்கள் இருப்பதால், நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும். இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் கால்சிய படிவு உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.