சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை டாஸ்மாக் நிறுவனம் நிறுவி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


"இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் தி.மு.க"


குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில், கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சி, மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதிலாக, தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்டு வருவதாக விமர்சித்த அவர், திமுக ஆட்சியில், தமிழ் நாட்டை போதைப் பொருட்களின் கேந்திரமாக மாற்றிவிட்டார்கள் என குற்றம்சாட்டினார்.


"இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையைத் துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. சாதாரண குளிர்பானங்களை அருந்துவதே உடல் நலத்திற்குக் கேடு என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தி வரும் நிலையில், மதுபானங்களை தாராளமாக பயன்படுத்த இளைஞர்களைத் தூண்டுகிறது இந்த விடியா தி.மு.க அரசு.


இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனயாகக் கைவிட வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.


பழனிசாமியை கலாய்த்து தள்ளிய அமைச்சர் செந்தில் பாலாஜி:


இதற்கு பதிலடி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், 'உள்ளேன் அய்யா' என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் பழனிசாமி" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக,  தானியங்கி மது விற்பனை இயந்திரம் குறித்து விளக்கம் அளித்த டாஸ்மாக் நிறுவனம், "சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை தடுக்கும் வகையில் நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ நடவடிக்கையில் உள்ளது.


இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படுகிறது. 


இந்த தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் மூலம் கடைப்பணியாளர்களின் முன்னிலையில் கடைக்கு உள்ளேயே மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் 21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. இது குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிட்டிருந்தது.