கோவை கொடிசியா மைதானத்தில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சொத்து பட்டியல் குறித்து போதிய தெளிவான விளக்கத்தை ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பில் என ஒரு காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த எக்ஸ்.எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவிக்கிறார்.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம் ரூபாய். மாத மாதம் இதை யார் கொடுக்கின்றார்? கார் டீசல் அடிக்க யார் பணம் தருகிறார்கள்? உதவியாளர்களுக்கு சம்பளம் தர யார் பணம் தருகிறார்கள்? ஒருமாதம் உதவி செய்யலாம். வருடம் முழுக்க யார் உதவி செய்வார்கள்? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு பணம் அனைத்தும் வெளியில் இருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார் ரூம்மில் இருந்து வருகிறதா? யார் அந்த நண்பர்? வார் ரூமில் செய்யப்படும் வசூல்தான் அவரது நண்பரா? யார் செலவு செய்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட வேண்டும்.
திமுகவினர் வேட்பு மனுவில் தெரிவித்த சொத்து பட்டியலை தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அண்ணாமலை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் சொந்த நிதியில் இருந்து பணம் எதுவும் செலவு செய்யவில்லை என்று தெரிவித்து இருக்கும் போது, அரவக்குறிச்சி தேர்தலில் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தது எப்படி என்று தெரிவிக்கவில்லை. அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தியத்தற்கு பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம். பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கினது 4.5 லட்சம் ரூபாய். அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு காலமாக ஆக கூடுமே தவிர குறையாது. இரண்டு மாதத்தில் எப்படி விலையை குறைத்து தர முடியும்?
வாட்ச் நம்பரையும் மாற்றி மாற்றி சொல்கின்றார், அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார். ஒரு வெகுமதியை மறைக்க , லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார். பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன வெட்கம்? தேர்தலின்போது வேட்பு மனுதாக்கலில் இதை ஏன் சொல்லவில்லை என கேட்பார்கள் என்பதற்காக இப்படி செய்கிறார். தேசியக் கட்சியில் இருப்பதால் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்கின்றார். அவர் வெளியிட்ட பட்டியலில் எதுவுமே இல்லை. அண்ணாமலை வெளியிட்டதில் ஒரு முகாந்திரம், ஒரு அடிப்படை ஆதாரம் இல்லை.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை 3.75 லட்சம். 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வீட்டுக்கு வாடகை தர முடியுமா? தூய்மையாக இருக்கின்றீங்க என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க? தன்னைவிட தனது மனைவி அதிகம் சம்பாதிப்பதாக அண்ணாமலை ஏற்கனவே தெரிவித்திருக்கின்றார் அப்படி இருக்கும்போது ஏன் அடுத்தவன் காசில், அடுத்தவன் சொத்தில் வாழ்கிறார்?. படையப்பா படத்தில் ரஜினிகாந்த் பேசும் டயலாக்போல மாப்பிள்ளை அவர்தான் என்பதைப்போல பயன்படுத்துவதெல்லாம் நான்தான். ஆனால் கொடுப்பதெல்லாம் அவர்கள் என்பதை போல இருக்கின்றது. இதுவே ஒரு அரசியல்வாதிக்கு அசிங்கமான விசயம் இல்லையா?
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருக்க வேண்டும். ஆனால் கோமாளித்தனமாக அண்ணாமலை செய்வதை டிவியில் ஒளிபரப்பி விட்டு, அதற்கு விளக்கமும் கேட்கின்றீர்கள். கட்சி தேசிய கட்சியாக இருக்கலாம். அந்த கட்சிக்கு தலைமை கோமாளியாக, கழிவு பொருளாக இருந்தால் என்ன செய்வது? தேசிய கட்சியில் இருந்தால் மட்டும் எல்லாம் வந்து விடுமா? சாப்பிடும் சாப்பாடு, பெட்ரோல், சம்பளம், வீடு எல்லாம் ஓசி. அவரது மூளையும் ஓசி. அவர்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்து இருக்கின்றனர். தேர்தலில் எதை செய்யப் போகின்றனர் என்பதை சிந்தித்து தேர்தல் பணி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து இன்று வெளியிட்டு இருக்கிறார்.
என்னைப்பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார். முதல்வர் அனுமதி பெற்று நானே நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது வழக்கு தாக்கல் செய்ய இருக்கின்றேன். ஒரு பொய்யை மறைக்க ஓர் ஆயிரம் பொய்யை சொல்கிறார். ஒருபோதும் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நேற்று ஒருநாள் அதிகபட்ச மின் நுகர்வு 400 மில்லியன் யூனிட் கடந்து இருக்கிறது. முதல் முறையாக இந்த அளவு கடந்து இருந்தாலும், எந்த வித மின்தடையும் இல்லாமல் மின்வாரியம் செயல்ப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் தமிழ்நாட்டு முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். வெளிச்சந்தையில் அவசரத்துக்கு வாங்குவதை விட, முன்கூட்டியே கோடை காலத்துக்கு தேவையான மின் தேவையை கணக்கிட்டு, குறுகிய கால ஒப்பந்த மூலம் வாங்கியுள்ளோம். மின் சந்தையில் வாங்குவதற்கும், இப்பொழுது டெண்டர் மூலம் வாங்கியிருப்பதால் ஏற்பட்டிருக்கின்ற சேமிப்பு 1312 கோடி ரூபாய். இந்த சேமிப்பை முதல்வர் உருவாக்கி தந்திருக்கிறார். மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக இருக்கிறது. கடந்த ஆண்டுகள் போல இல்லாமல் இந்த ஆண்டு இன்னும் மிகச் சிறப்பாக பாதிப்பு இல்லாமல் மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.