Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலில் விசாரிக்கப்படவுள்ளார். இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 7வது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி பிறப்பித்தார்.
சட்டவிரோதமாக பணப்பரிவர்தனை செய்ததாக கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்றக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் தொடர்கிறது.
இதற்கிடையே, உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கடந்த மூன்று மாதங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் அவர், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையில், அமலாக்கத்துறை தரப்புக்கும் செந்தில் பாலாஜி தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது. ஆனால் இறுதியில் ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரிக்கையின்போது "அமலாக்கபிரிவு கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அவர்கள் நடத்திய விசாரணையின் மூலம் கிடைத்தது அல்ல. மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டது. 1.34 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், செந்தில் பாலாஜியின் வருமான வரி கணக்கை பார்த்தால் உண்மை தெரியும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார். உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்" என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.