அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். அமலாக்கத்துறை தரப்பு வாதம் திங்கள்கிழமை வழங்கட்டுமா என அமலாக்கத்துறை தரப்பு துஷார் மேத்தா கேட்க, அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் செவ்வாய்கிழமை விசாரிக்கலாம் என கூறினார். இதனை கேட்டு வழக்கு விசாரணை செவ்வாய்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி அமர்வில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதிட்டார். இரு தரப்பினருக்கும் கார சார விவாதம் நடைபெற்றது.
அப்போது, என். ஆர். இளங்கோ, செந்தில் பாலாஜி கைது தொடர்பாக குற்றவியல் நடைமுறை சட்டப்படி நோட்டீஸ் வழங்கவில்லை. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகளின்படி ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம். அட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வாதத்தை முன் வைத்தார்.
மேலும், ”கைது குறித்து தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது என்பது அடிப்படை உரிமை அதை அரசியல் சாசனத்தின் 15 ஏ பிரிவில் அம்பேத்கர் சேர்த்திருக்கிறார். நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானதாக இருந்தால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. சோதனையின் போது இரவு 11 மணி முதல் ஒரு மணி வரை செந்தில் பாலாஜிக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்த எங்கள் தரப்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 13ம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டது” என குறிப்பிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட அமலாக்கத்துறை மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது என தனியாக மனு தாக்கல் செய்துள்ளோம் என குறிப்பிடப்பட்டது. இரு தரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபர்திகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி வழக்கை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.