அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் முதல் வகுப்பில்  அடைக்கப்பட்டுள்ளார். 

Continues below advertisement

அமலாக்கத்துறை சோதனை

கடந்த ஜூன் 13 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 17 மணி நேரம் நீடித்த சோதனைக்குப் பின் ஜூலை 14 ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. 

பின்னர் நீதிமன்றத்தில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரப்பட்டு, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டர். அங்கு கடந்த ஜூன் 21 ஆம் தேதி செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற காவலும் வழங்கியது. 2 முறை நீட்டிக்கப்பட்ட காவல், தற்போது ஜூலை 26 ஆம் தேதி வரை  3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

புழல் சிறையில் அடைப்பு

இதற்கிடையில் செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை முதலில் விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்பை வழங்க, விசாரணை 3வது நீதிபதிக்கு சென்றது. அவர் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் உறுதியானது. இதனிடையே நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நேராக புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  

சிறையில் கிடைக்கும் வசதிகள் 

இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி அமைச்சர் என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 0001440 எனும் கைதி நம்பர் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டில், மெத்தை, தலையணை, டிவி, நற்காலி, மேஜை, நவீன கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்துக்கொடுக்கப்படுள்ளது.

உணவாக காலையில் மிளகு பொங்கல், உப்புமா மற்றும் அரிசி கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அவர் இட்லி அல்லது தோசை கேட்டால் தனியாக அவருக்கு அதனை செய்துக் கொடுக்க ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மதிய உணவாக சாம்பாருடன் ஒரு கூட்டு அல்லது பொரியல் தரப்படுகிறது. அது பிடிக்கவில்லையென்றால் சிறை உணவகத்தில் மற்ற கைதிகளுக்கு செய்யப்படும் உணவை அவர் வாங்கி சாப்பிடலாம்.

முதல் வகுப்பு கைதி என்பதால் அவருக்கு சிறப்பு உணவாக வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு அதாவது கோழிக்கறி குழம்புடன் சாதம் வழங்கப்படும். அசைவம் வேண்டாம் என்றால் அவர் அதற்கு பதில் சாம்பார், நெய், பொரியல், வாழைப்பழம் பெற்று சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவருக்கு சப்பாத்தியும் வழங்கப்படுகிறது.

இதுவரை வெளியில் இருந்து உணவு கொண்டு வந்து வழங்க அனுமதி இல்லை. அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினால் சிறப்பு அனுமதி பெற்று சமைத்து கொண்டு போய் கொடுக்கலாம் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.