அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை கேரள மாநில கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளது. கடந்த வாரம் கட்டப்பட்டு வரும்  அசோக் குமார் வீட்டின் கட்டுமானப் பணிகளை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட அசோக் குமாரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


கடந்த 9ஆம் தேதி கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். இந்த வீட்டில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வருமானவரித்துறை அதிகாரிகள் முதன்முறையாக சோதனையை தொடங்கினர்.


அப்போது கட்டுமான பணி நடைபெறும் சுற்றுச்சுவரின் கதவில் அசோக் குமார் நேரில் ஆஜராக கூறி முதன்முறையாக சம்மன் ஒட்டினர். ஏற்கனவே கடந்த 3 மற்றும் 4 ஆகிய இரண்டு தேதிகளில் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு மற்றும் அலுவலகம், சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனலட்சுமி மார்பிள்ஸ் என்ற டைல்ஸ் ஷோரூம் மற்றும் அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றி எடுத்துச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்துதான் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை முடக்கியது. 


சோதனையின் இடையே   அசோக்குமாரின் மனைவி நிர்மலா சொத்து ஆவணங்களுடன் சோதனை நடைபெறும் பங்களாவில் நேரில் ஆஜராகி  விளக்கம் அளிக்க வேண்டும் என்று, கரூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அசோக் வீட்டில் சம்மன் ஒட்டினர். 


அதனைத் தொடர்ந்து கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை வழங்கினர். அந்த கடிதத்தில் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் இருக்கும் பங்களா வீட்டின் சொத்துக்களை முடக்கியுள்ளதாகவும், அமலாக்கத்துறை சென்னை இணை இயக்குனரிடம் முன் அனுமதி பெறாமல் சொத்துக்களை மாற்றவோ, விற்பனை செய்யவோ வேறுவிதமாக கையாளவோ கூடாது என குறிப்பிட்டிருந்தனர். 


சம்மன் அனுப்பி ஆஜராகாததாலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விரைவில் முடிக்கவும் அசோக் குமாரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தேடி வந்தது. ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்ததில் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.