சென்னையில் ஆளுநர் விவகாரம் மற்றும் சிதம்பரம் தீட்சிதர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ஆளுநரை பொறுத்தளவில் தெளிவான ஒன்று என்னவென்றால் இதுவரையில் எந்தவொரு ஆட்சியிலும் மீட்கபடாத அளவிற்கு 4,225 கோடி ரூபாய் அளவுள்ள சொத்துகளை மீட்ட ஆட்சி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. 50,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியிருந்தாலும்,  அந்த 50,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புகள் கடந்த 10  ஆண்டுகால ஆட்சியிலும் இருந்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்த பிறகுதான் 50,000 ஏக்கரில் 4000 ஏக்கர்கள் மீட்கப்பட்டுள்ளது. அதோடு, மட்டுமில்லாமல் இந்து சமய அறக்கட்டளையின் திருக்கோயில்களின் நிலங்களை அளவிடுகின்ற பணி ரேடார் கருவிகளின் மூலம் அளவிடப்பட்டு வருகிறது. 


அதில், இதுவரையில் 1,11,000 மதிப்பிலான நிலங்கள் அளவிடப்பட்டு, அந்த நிலங்களுக்கு ஹெச்.ஆர்.எஸ் என்ற கான்கீரிட்டால் ஆன கற்களை அமைத்து  இது கோயிலுக்கு சொந்தமான இடம் என்று பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. 


இதுபோல் எண்ணற்ற சாதனைகளை இந்து சமய அறநிலைத்துறை செய்துள்ளது. இதை பொறுத்துகொள்ள முடியாமல், ஆளுநர் சொல்லவில்லை என்பதற்காக இதை பொறுக்கமுடியாது. இதில் குறிப்பிடதக்க விஷயம் என்னவென்றால் கைப்பற்றப்பட்ட 6 இடங்களில் பாஜக நிர்வாகிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. முதலில் ஆளுநர் நன்றி சொல்ல வேண்டும் என்றால், நிலங்களை மீட்ட தமிழ்நாடு அரசுக்கு சொல்ல வேண்டுமே தவிர குறைகளை சொல்ல முடியாது. 


தீட்சிதர் பிரச்சனை மற்றும் சிறுமிகளின் கன்னித்தன்மை சோதனை குறித்து செய்திகளுக்கு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, “ இது சட்டத்தின் ஆட்சி.. தவறு எங்கு நடந்திருந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  குழந்தை திருமணச் சட்டம் 1930 ஆம் ஆண்டே இயற்றப்பட்ட சட்டம். 5 வயது குழந்தைகள் கூட இதுபோன்ற குழந்தை திருமணங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.  அதை தடுப்பதற்காகதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.  பெண்ணுரிமை பேசுகின்ற இந்த நாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் 4 புகார்கள் தரப்பட்டன.  அந்த 4  புகார்கள் மீதும் வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன, ஆனால், சிறுமிகள் மீது இரட்டைவிரல் சோதனைகள் எங்கும் நடத்தப்படவில்லை.  சட்டவிதிமுறைகள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் அறிவுரையின்படி, பெண் மருத்துவர்கள் கொண்டு பாதுகாப்பான முறையில் சோதனை மேற்கொண்டதாக டிஜிபி சொன்னார். 


தவறு செய்தவர்கள் சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் அந்த சட்டம் அவர்கள் மீது பாய கூடாதா..? சிதம்பரம் தீட்சிதர்கள் என்றால் ஆளுநர் அவர்களுக்கு என்று தனிசட்டம் நிறைவேற்றி இருக்கிறாரா..? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே, சட்டமீறல், விதிமீறல் எங்கிருந்தாலும்  அதற்கு திமுக ஆட்சி தக்க நடவடிக்கை எடுக்கும். 


ஆளுநர் என்ன ஆண்டவரா..? ஆண்டு கொண்டிருப்பது தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. ஆகவே, நியமன பதவியில் வந்த ஆளுநர் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களின் நன்மைகளை நோக்கிதான் ஆட்சி செல்லும்” என்று தெரிவித்தார்.