திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு இனிமேல் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு:
இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டிற்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் மேற்கொள்ள இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்னி ஸ்தலம்:
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் திகழ்கிறது. இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமின்றி, பிறமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறார்கள். குறிப்பாக, பவுர்ணமி தினத்தன்று இந்த கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், கிரிவலம் செல்ல அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனி பவுர்ணமி:
அந்த வகையில் இந்த மாதத்துக்கான (ஆனி) பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை (திங்கட்கிழமை) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது. இன்று இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் எந்தவித கட்டணமும் இன்றி அருணாச்சலேஸ்வரை வழிபடலாம்.
கிரிவலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரம்:
இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சாமி தரிசனத்துக்கு பின்னர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் பகதர்கள் கிரிவலம் செல்ல உள்ளனர். பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் மற்ற நாட்களைவிட பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.