தமிழ்நாடு முழுவதும் நிகழாண்டு 43 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகத்திலும், தனியார் அரிசி ஆலையிலும் ஆய்வு மேற்கொண்ட உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது; 

 

தனியார் அரிசி ஆலையில், அரசிடமிருந்து பெற்ற நெல்லை தரமாக அரிசியாக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு வழங்குகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். பொதுமக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருள்கள் தரமாகவும், எடை குறைவு இல்லாமலும் வழங்க வேண்டும் என முதல்வர் அதிகாரிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நெல் கொள்முதலில் 17 சதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். சென்ற ஆண்டு 21 சதவீதம் ஈரப்பதம் இருக்கின்ற அளவிலே மத்திய அரசில் இருந்து சென்ற ஆட்சியாளர்கள் அனுமதி வாங்கிய காரணத்தினால் சில இடங்களில் கருப்பு கலந்து அரிசி தரமற்றதாக இருந்தது. 

 

அது தரமான முறையில் மாற்றி வழங்க என்ன செய்யலாம் என ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்து. அதையும் தாண்டி 32.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்தது. இந்த ஆண்டு 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 34.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதத்தில், அரசு நிர்ணயம் செய்துள்ள 43 லட்சம் மெட்ரிக் டன்னை விட கூடுதலாக நெல் உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் எவ்வாறு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அவர்களுக்கு உரியமுறையில் பணம் வழங்கப்படுகிறதா, விவசாயிகளுக்கு அதில் சிரமம் உள்ளதா, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் தேக்கம் இல்லாமல், உடனடியாக அரவைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நேரடி நெல் கொள்முதல் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

 

தமிழகத்தில் 2.9 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்கள் பயன்படும் வகையில் நல்ல தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி இயற்கைப் பேரிடரில் இருந்து விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை பாதுகாக்கும் விதமாக, சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும். தமிழகத்தில் 2.11 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணபித்துள்ளனர். சரியான ரேஷன் கார்டுகள் வைத்துள்ளாராக என அடையாளம் கண்டறிந்து, போலியான ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்படும் என தெரிவித்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் உணவுத்துறை, கூட்டுறவுத் துறை, வேளாண் துறை, மற்றும் பொதுப்பணித்துறை, அதிகாரிகள் உடனிருந்தனர்.