தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. விழுப்புரத்தில் நேற்று இரவு 10 மணி முதல் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. அடுத்த சில நிமிடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெய்யத்தொடங்கிய மழை அடை மழையாக இரவு வரை தூறிக்கொண்டே இருக்கிறது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது. தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காலையில் இருந்து இரவு வரை தொடர் மழை பெய்தது.


20 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் நகரின் மைய பகுதியில் பேருந்து நிலையம் அமைந்திருந்தது. உள்ளூர் பேருந்து நிலையம் என்றும் திருவள்ளுவர் பேருந்து நிலையம் என்றும் இரு பிரிவுகளாக இது இயங்கியது. நகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க, பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது.




இதற்கிடையில், 1991ம் ஆண்டு தொடக்கத்தில் அப்போது விழுப்புரம் எம்எல்ஏ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, விழுப்புரம் பூந்தோட்டம் ஏரியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். இதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விழுப்புரம் தனி மாவட்டமாக உருவானது. 1994 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூந்தோட்டம் ஏரியின் அருகிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இது பேருந்து நிலைய விஸ்தரிப்புக்காக ஒதுக்கப்பட்ட இடம் எனும் அறிவிப்பு பலகை மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்டது.


இந்நிலையில் 1994 -ம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடமாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பூந்தோட்டம் ஏரி தேர்வு செய்யப்பட்டது. பூந்தோட்டம் ஏரியில் இருந்து 15 ஏக்கர் பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டப் பெருந்திட்ட வளாகம் அமைப்பதற்கான அரசாணை 7.11.1994 அன்று வெளியிடப்பட்டது. ஆனாலும் பணிகள் ஏதும் தொடங்கப்படவில்லை. மீண்டும் 1996-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 8.6.1998ம் தேதி புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அடிக்கல்லை அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி நாட்டினார். பணிகள் வேகமாக நடந்து 9.6.2000 ம் தேதி நவீன புதிய பேருந்து நிலையத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.




”ப” வடிவிலான இப்பேருந்து நிலையம் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு அதாவது எதிர்முனையில் உள்ள பகுதிக்கு மழையில் நனையாமல் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் பேருந்து நிலையத்திற்குள் வாகனம் நிறுத்துமிடம் முதலில் அமைய பெற்றதும் இங்குதான்.சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடுத்து பெரிய பேருந்து நிலையம் என்று சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கனமழையின் காரணமாக  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அலங்கார நுழைவு வாயிலில் ஒருவழியில் வாகனங்கள் வந்தன,இதனால்  போக்குவரத்து அதிகம் பாதிக்கப்பட்டது.




அப்போது அங்கு வந்த உயர் கல்வித்துறை அமைச்சரின் வாகனமும் அதில் சிக்கியது. இதன் காரணமாக உடனடியாக சம்பவ இடத்தில் இறங்கிய உயர்கல்வித்துறை அமைச்சர் அலங்காரம் நுழைவாயில் வளைவு கட்டுமான பணியை நிறுத்தி அங்கிருந்த பொருட்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். தனது வாகனம் நெரிசலில் சிக்க காரணமாக இருந்த அப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவுவிட்டார்.