இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 07-12-2022 நாளிட்ட அறிவிக்கையில், நேற்று (06.12.2022) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியிருந்த நன்கமைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பின்னர் மேலும் வலுவடைந்து இன்று (7.12.2022) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையிலிருந்து சுமார் 770 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு மற்றும் அதன் அருகில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது.


மேலும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயல் சின்னமாக வலுவடைந்து, 08.12.2022 அன்று காலை வட தமிழக கடற்கரை அருகில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடையக்கூடும் என்றும், பின்னர் அடுத்த 48 மணி நேரத்திற்கு தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள்


Ø  பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல் துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்,


Ø  பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைக்கவும், போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.


Ø  மின் கம்பங்கள், மின் கடத்திகள் ஆகியவற்றின் இருப்பு வைத்திருப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகும் மின் இணைப்புகளை சீரமைக்க குழுக்கள் அமைக்க வேண்டும்.


Ø  மணல் மூட்டைகள், கம்பங்கள், அவசரகாலத்தில்  தேவையான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும்.


Ø  பாதிப்பிற்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.


Ø  நிவாரண முகாம்களை தயாராக வைத்திருப்பதோடு, குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்,


Ø  தங்குதடையின்றி குடிநீர் வழங்குவதற்கு போதுமான ஜெனரேட்டர்கள் வைத்திருக்க வேண்டும்.


Ø  பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களுக்கும், நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சீரான போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


Ø  பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


Ø  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் உணவு அளிக்கும் வகையில் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.


Ø  அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உபரி நீர் வெளியேற்றும் போது பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும்.


Ø  நெடுஞ்சாலை, நீர் வள ஆதாரத்துறை, மின் வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதன் காரணமாக கன, மிக கனமழை மற்றும் அதி கனமழைப் பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


08-12-2022


கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


 காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


09-12-202


காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல்  ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


10-12-2022


கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


 நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


11-12-2022


திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.