தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலை திறனை கண்டறியும் விதமாக கலை திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம், நாடகம், இசை, கட்டுரை எழுதுதல், ஓவியம், கதை எழுதுதல், சிற்பம் செய்தல், பேச்சுப் போட்டி, இசைக் கருவி வாசித்தல், திருக்குறள் ஒப்பித்தல், புகைப்படம் எடுத்தல், பல குரல் பேச்சு, விவாத மேடை பட்டிமன்றம் உள்ளிட்ட பல போட்டிகள் பள்ளி அளவில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. 



இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் கிடந்த நவம்பர் மாதம் 29 ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வரை நடந்தது. இதில் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று நடத்தப்பட்டது. சேலம் மாவட்டம் மரவனேரி பகுதியில் உள்ள புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் முதன்மை கல்வி அலுவலர் முருகன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, பத்ம வாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மணக்காடு நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிறுமலர் துவக்கப் பள்ளி ஆகிய ஏழு இடங்களில் நடத்தப்படுகிறது. இன்று முதல் வருகின்ற 10 ஆம் தேதி வரை நடத்தப்படும் இக்கலை திருவிழாவில் 207 வகையான போட்டிகளில் 15,385 மாணவ, மாணவியர்கள் பங்கேற்கின்றனர். 



மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்று வெற்றி பெரும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களில் தர வரிசை அடிப்படையில் முதல் 20 மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. 


இது குறித்து மாணவர்கள் கூறுகையில், கொரோனாவுக்கு பிறகு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மிகவும் குறைந்து விட்டது. கலைத்துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு இந்த கலைத் திருவிழா நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறினார்.