புதுச்சேரி மாநிலத்தில் திராவிட மாடல் அரசு அமைவது உறுதி என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 


புதுச்சேரி மாநிலத்தில் திமுக மாணவர் அணி மற்றும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் தொகுதிகள் சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சாரம் அவ்வைத் திடலில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில மாணவர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.பி.மணிமாறன் தலைமை வகித்தார். முன்னாள் அவைத்தலைவர் வழக்கறிஞர் பலராமன், பொதுக்குழு உறுப்பினர் வே.கார்த்திகேயன், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பெ.வேலவன், கோகுல்,, முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் ரா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தேர்தல் பணிக்குழு தலைவரும், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பங்கேற்று மொழிப்போர் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், ‘மத்திய அரசின் உதவியை எதிர்பார்க்காமல் தமிழ்நாட்டில் எண்ணற்ற திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் திராவிட ஆட்சியை அசைத்து விடலாம் என்ற மத்திய அரசின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. திராவிட இயக்கத்தால் தான் தமிழ்நாடு தமிழ்நாடாகவும், புதுச்சேரி புதுச்சேரியாகவும் இருக்கும். 


தமிழ்நாட்டை ஒட்டியுள்ள புதுச்சேரியிலும் திராவிட இயக்கத்தின் ஆட்சி இருந்தால் நன்றாக இருக்கும். இதுபற்றி திமுக தலைமை முடிவு செய்யும். மேலும் திமுக தலைவரை பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது? ராமரை வைத்து அரசியல் செய்யக்கூடாது. அந்த கோயில் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை? போன்ற கேள்விகளை முன்வைத்தால் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைகளை வைத்து மிரட்டுவார்கள். இந்த உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். அடிபணியவும் மாட்டோம். தமிழ்நாட்டில் ஒருபோதும் பாஜக மலராது. எதிர்வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதுச்சேரியில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமையும் என தெரிவித்தார்.  




மேலும் படிக்க: Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் - தமிழ்நாட்டை குறிவைக்கும் பாஜக, பொறுப்பாளர்கள் நியமனம்