முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை, தமிழகத்தில் தமிழக அரசு பணி செய்பவர்கள் அடிப்படை தமிழ் அறிவை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கபட்டுள்ளது என அமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


 அரசு போட்டித்தேர்வில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம் ஆக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பசுமை வழி சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.




பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,


நிதி நிலை அறிக்கை ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மனித வள மேலாண்மை துறையின் மானிய கோரிக்கை நடைபெற்ற போது,போட்டி தேர்வில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்படும் என கூறப்பட்டது. மாநில அரசின் எந்த தேர்வு எழுதினாலும், அடிப்படை தமிழ் தாள் கட்டாயம் எழுத வேண்டும். அதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண் கட்டாயம் வாங்க வேண்டும்.



அப்போது தான் அடுத்த சுற்றிற்கு தகுதி பெற முடியும். அரசு பள்ளியில் படித்து வர கூடிய மாணவர்கள் அதிகம் பயன்படுவார்கள். இனி நடக்க கூடிய தேர்வுகளுக்கு இந்த அரசாணை பொருந்தும்.  TNEB யில் வெளி மாநிலத்தவற்கு வேலை கிடைத்ததாக தகவல் வந்தது. இவற்றை தடுக்கும் விதமாக தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பணியில் 15 லட்சம் காலியிடங்கள் உள்ளன. 9 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அரசு பணிகளில் சராசரியாக 35 சதவீதம் காலியிடங்கள் இருந்துள்ளது.


அரசின் பணியிடங்களை நிரப்ப 70 முதல் 80 தேர்வுகள் நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. தமிழகத்தின் கல்வி திட்டம் தான்  நாட்டிலேயே சிறந்த கல்வி திட்டமாக திகழ்கிறது. கொரோனாவிற்கு முன்பு 90% மாணவர்கள் மேல்நிலை பள்ளி முடித்தார்கள். கிராமப்புறங்களில் அரசு பள்ளிகளில் படிப்பவருக்கு தமிழ் மொழி கட்டாயம் என்பதால் வாய்ப்பு அதிகரிக்கும்.சமூக நீதி நிலைநாட்டப்படும்.


முனைவர் பட்டம் தகுதி அளவிற்கு தமிழ் தெரிய வேண்டும் என சொல்ல வில்லை. அடிப்படை தமிழ் அறிவுக்காக தான் இவற்றை வலியுறுத்தியுள்ளோம். 10ம் வகுப்பு தமிழ் பாடம் அளவிற்கு அறிந்திருந்தால் போதுமானது. யாதும் ஊரே யாவரும் கேளீர் எனும் தத்துவ படி தான் செயல்படுகிறோம். அனைத்து சமூதாயத்தில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் அரசு பணியில் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.


ஆங்கில வழி படித்தவர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நீதி மன்றம் செல்லட்டும். எந்த ஒரு தேர்வும் மனிதர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. அதனால் தான் நீட் தேர்வை தொடர்ந்து எதிர்க்கிறோம். இங்கு யார் யார் தமிழர் என்பதை அடையாள படுத்த முடியாது. ஆனால் தமிழ் கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டும்.  எந்த மாநிலத்தில் இருந்து வந்தாலும் இங்குள்ள குடிமையியல் பணியாளர்கள் தமிழ் தெரிந்து வைத்துள்ளனர்.


 மேலை நாடுகளில் ஓய்வு பெறும் வயதை அதிகப்படுத்தி கொண்டே வருகிறார்கள். ஓய்வு பெறும் வயதை 58லிருந்து 60 வயது வரை அதிகப்படுத்தாமல் இருந்திருந்தால், அரசு பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும். ஏனெனில் கடந்த இரண்டு வருடமாக அரசு பணிகள் நிரப்பப்பட வில்லை. ஒன்றிய அரசு பணிகளிலும் தமிழர்கள் போதுமான அளவு நிரப்ப வேண்டும். இது குறித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளார், என்றார்.