அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதி அமைச்சகத்தில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை என தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயோயில் மாற்றியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. திமுக ஆட்சி அமைந்து ஏற்கனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
3 வது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மீது புகார்கள் வந்த நிலையில் அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிதாக டி.ஆர்.பி ராஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்ற அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவிற்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அமைச்சரவை மாற்றத்தில், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதி துறை, தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், அந்த துறை மனோ தங்கராஜிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக தமிழ் வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் பிடிஆர் ஆடியோ வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிடிஆர் மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தனர். இந்த சூழலில் அவரிடம் இருந்த நிதி துறை தங்கம் தென்னரசுக்கு வழங்கப்படும் என பேச்சுக்கள் அடிப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இடம் கொடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனால் கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் பிடிஆர் பதவி மாற்றப்படும் எனவும் தொடர்ந்து செய்திகள் கசிந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்று காலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ஃபேஸ்புக் பக்க பயோவில் நிதி அமைச்சர் என பதிவு செய்திருந்தார்.
இதனால் நிதியமைச்சர் பதவி தன்னை விட்டு போகவில்லை என்பது போன்ற சமிக்ஞையை பி.டி.ஆர் வெளிப்படுத்தினார்.
ஆனால் மாற்றப்பட்ட அமைச்சரவை பட்டியலில் நிதி துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்படிருந்தது. இதன் காரணமாக அமைச்சர் பிடிஆர் மீண்டும் நிதி அமைச்சர் என்பதை நீக்கி தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என மாற்றினார். இதனால் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் செயல் நெட்டிசன்ஸ் மத்தியில் விமர்சனத்தை சந்தித்துள்ளது.
படையப்பா படத்தில் சிவாஜி கணேசன் ”இருப்பா... கடைசியா ஒரு தடவ நான் வாழ்ந்த வீட்டில உட்காந்துட்டு வரேன்” என்ற காட்சி போல் பிடிஆர் செயல்பாடுகள் இருப்பதாக கிண்டல் அடிக்கின்றனர். இப்படி மாறி மாறி தனது முகநூல் பயோவில் மாற்றம் செய்யப்பட்டது நெடிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதேபோல் தனது டிவிட்டர் பக்கத்திலும் தனது பயோவை மாற்றியுள்ளார்.