தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, 13 மணிநேர சோதனைக்கு பின் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து விசாரணை நிறைவடைந்து புறப்பட்டார் பொன்முடி


அமலாக்கத் துறையினர் சோதனை


சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (17/07/2023) நண்பகல் முதல் சோதனையில் ஈடுபட்டனர். சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்றது. சென்னை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொன்முடி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 13 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக அவரது வீட்டிலிருந்து அமலாக்கத்துறையினரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும், அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணிக்கு சொந்தமாக இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.  துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் அமைச்சருக்கு சொந்தமான 5 இடங்களிலும், அவருக்கு சொந்தமான சூர்யா கல்வி குழும கல்லூரிகள் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. தற்போது, துணை ராணுவப்படையினர் பாதுகாப்புடன், அமைச்சர் பொன்முடியின் சொந்த காரில் அமலாக்க துறையினர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணை முடிந்ததும் பொன்முடி கைது செய்வது குறித்து தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செம்மண் குவாரி வழக்கு:


2006 - 2002 ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் கெளதம் சிகாமணி மற்றும் உறவினர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும், 28 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. 


இந்த வழக்கில் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்பியுமான பொன்.கெளதம சிகாமணி, கட்சி நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்தனர். 


இவ்வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில், கவுதமசிகாமணி எம்.பி., தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 19-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து, விழுப்புரம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கு 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


அமலாக்கத் துறையினர் அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெறுவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. 


அண்மையில் முடிந்த வழக்கு


1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் உள்ள வடக்கு காலனி பகுதியில் 3,650 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்,  நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி உட்பட அனைவரையும் விடுதலை செய்து சில தினங்களுக்கு முன்பாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், அந்த சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் தான், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.