விழுப்புரம் எம்.ஆர்.சி., பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில், அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி அறிவுரை கூறினார். மேலும் விழாவில் அமைச்சர் பொன்முடி கூறுகையில், "இன்றைய குழந்தைகள் தான் வருங்கால சந்ததியாவார்கள். நீங்கள் இப்பொழுதே உங்களுடைய கல்வி அறிவினை வளர்த்துக்கொள்வதால் மட்டுமே அடுத்தடுத்த வரக்கூடிய மேற்படிப்புகளில்சிறந்த முறையில் கல்வி கற்க முடியும். தமிழக முதல்வர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் அரசு நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தினை ஒலி வடிவில் இசைக்காமல் நேரடியாக அனைவரும் குரல் வடிவில் பாட வேண்டும் என உத்தரவிட்டார். இப்படியொரு அறிவிப்பு வெளியிட்டதன் காரணமாக தமிழ்மொழியினை காப்பது மட்டுமல்லாமல் தமிழ்மொழியின் இனிமையினையும் இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்.


ஏனென்றால் தற்போது தமிழுக்கு பல்வேறு சோதனைகள் வந்துகொண்டுள்ள காலம். பள்ளிக்குழந்தைகளில் பலர் தமிழ் வழிக்கல்வி மற்றும் ஆங்கில வழிக் கல்வி முறையில் பயின்று வருகிறீர்கள். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் கடினமானதாக இருக்கும். ஆனால் முயற்சி செய்தால் எல்லாம் எளிமையே. ஆங்கிலக் கல்வியினை ஒதுக்கி வைக்காமல் அதிலும் தங்களது ஈடுபாட்டினை காட்டிட வேண்டும். ஆங்கில வழி கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் முழு கவனத்தையும் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் எழுத, படிக்க நன்கு தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வழியில் கல்வி பயின்றால் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் உள்ளது. நமது தாய்மொழியினை தள்ளி வைக்காமல் தமிழ் வழியில் கல்வி கற்போம். பெரிய அளவில் வெற்றி பெற்ற அனைவரும் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.