தங்கம் தென்னரசு கண்டனம்:


தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிப்பதற்கு சில வழிமுறைகள் உள்ள நிலையில், இதுவரை எந்த மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவித்தது இல்லை.  மத்திய அரசு ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதனை அப்பன் வீட்டு காசு என்று சொல்ல முடியுமா? வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரும்  6 ஆயிரம் நிவாரணத்தை ஏன் ரொக்கமாக கொடுக்கின்றீர்கள் ? வங்கி கணக்கில் செலுத்தலாமே ? அரசு பணம் தானே அது ?  என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தார்.  இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புயல் - மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. புயல் - மழைக்குப் பிந்தைய நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு பகுதியும் படிப்படியாக மீண்டு வருகிறது. நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் மக்களைக் காக்கும், மீட்கும் பணி தொடர்ந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை.


"தமிழக மக்களை அவமானப்படுத்திவிட்டார்"


வெள்ளம் பாதித்த பகுதி மக்கள் மட்டுமல்ல, ஊடகங்களின் வாயிலாக கடந்த மூன்று வார காலமாக நாட்டு மக்கள் இந்தச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்து வருகிறார்கள். ஊடகங்களும் மக்கள் பாதிக்கப்பட்டு வரும் செய்திகளுக்குத்தான் அதிக முக்கியத்தும் அளித்து காட்சிகளை வெளியிட்டு வருகிறார்கள். நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை.


அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற  நிர்மலா சீதாராமன் அவர்கள். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக அவமானப்படுத்துவது ஆகும்.


ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும். இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார்.


திமுக அரசையும், முதலமைச்சர் அவர்களையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர்களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.


ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண்மையான எடுத்துக்காட்டு இது.


எனவே, 'ஒரே நாடு - ஒரே தேசம்' என்பதில் உண்மையான அக்கறை இருப்பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ்நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.