அண்ணல் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வாய்ப்பு இருந்தால் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
பேரவையில் பேசிய அமைச்சர் மூர்த்தி, “கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரி மாணவியர் விடுதியில் உணவக வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் விடுதியில் மாணவர்களிடம் இருந்து காசு பெறுவதை வைத்து உணவகத்தை நடத்திட கூடுதலாக செலவினம் ஏற்படுகிறது. மாணவரகளும் கூடுதல் தொகை அளித்து உணவகத்தை நடத்திட சம்மதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் விடுதியில் உணவக வசதி செய்து தர இயலாத நிலை உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் “மாணவியர் விடுதியிலும் உணவகம் செயல்படவில்லை. வெளி மெஸ்சில் இருந்து தான் உணவு வாங்கி வந்து கொடுக்கப்படுகிறது. அமைச்சர் உண்மை நிலையை அறிந்து மாணவர்கள், மாணவியர் என இரு பாலருக்கும் உணவக வசதியை செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் “சென்னை சட்டக்கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி அண்ணல் அம்பேத்கர் பெயரை சூட்டி பெருமை படுத்தினார். அதன்பிறகு வந்த ஆட்சியாளர்கள் 100 கி.மீ. தொலைவிற்கு அப்பால், கூகுள் மேப்பால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்தில் அமைத்துள்ளனர்.
சட்டக்கல்லூரி என்பது நீதிமன்றத்திற்கு சென்று பயிற்சி பெறக்கூடிய இடம். ஆகவே அதை மீண்டும் சென்னைக்கே கொண்டு வர வேண்டும். சட்டக்கல்லூரியை நினைத்தால் கண்ணில் ரத்தம் வருகிற அளவுக்கு இருக்கிறது. சட்டக்கல்லூரியை சென்னைக்கே கொண்டு வர அரசு முன்வருமா?” எனக்கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் பட்டறை பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் ஆகிய இரண்டு இடங்களில் சட்டக்கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. இரண்டு கல்லூரிகலும் இப்போது 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என சட்டப்படிப்பு படிக்கலாம் என கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அந்த இடத்தை காலி செய்து உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்து விட்டோம். அங்கு ஒப்படைத்த பிறகு இடத்தை பெற சாத்திய கூறு இல்லை.
தேவையான இடம் கிடைத்து, ஆணையத்தின் வழிமுறைகளை அறிந்து வாய்ப்பு இருக்குமானால், முதலமைச்சரிடம் எடுத்து சொல்லி சட்டக்கல்லூரியை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.