Minister MA Subramanian: எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


காப்பீடு திட்டம்:


சென்னை கிண்டி அரிமா சங்கலேபர் காலணியின் உயர்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின்  விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்  நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து‌ கொண்டார்.  பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ” முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு புதிதாக 1,019 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மருத்துவ  அட்டை வழங்கப்பட்டது. இதற்காக இன்று நான்கு வார்டுகளில் மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம்  நடைபெற்றது.


 முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் உண்மையான பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு  ஒன்றியத்திற்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும 1,260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


"அதிக பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடு”


தொடர்ந்து பேசிய அவர், ”இதில் ஒவ்வொரு முகாமிலும், புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடந்தது. கடந்த 2 ஆண்டு முன்பு வரை, தமிழ்நாட்டில் காப்பீட்டாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரத்து 107 குடும்பங்கள் ஆகும். 2 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 62 ஆயிரத்து 231 புதிய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. 


எனவே, காப்பீடு திட்டத்தில் அதிக பயன்பெறும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. காப்பீட்டு திட்டத்தின் அட்டைகளை தொலைத்தவர்கள் இந்த முகாமின் பதிவு செய்து மீண்டும் புதிய அட்டையை பெற்றுக் கொள்ளலாம். 234 தொகுதிகளில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு  விரிவாக்கம் செய்யப்படும். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவது குறித்து அறிவுரை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது.


அதன் முதல் கூட்டமும் நிறைவடைந்துள்ளது. காப்பீட்டு அட்டையை பயன்படுத்துவதில் பொதுமக்களுக்கு உள்ள சிக்கல்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை சார்பில் உள்ள சிக்கல்கள் குறித்து இக்குழு ஆய்வு மேற்கொள்ளும். பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக்கள் கேட்கப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு அட்டை குறித்து விரிவான அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்கும்" என்றார். 


 "கலைஞர் ஆராய்ச்சி மையம்”


மேலும், ”பொதுமக்களிடம் இருந்தும் கருத்துக்கள் கேட்கப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ காப்பீட்டு அட்டை குறித்து விரிவான அறிக்கையை இக்குழு சமர்ப்பிக்கும். மருத்துவ துறையின் அடுத்த கட்டமாக, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை வளாகத்தில் 100 கோடி ரூபாய் செலவில்  மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி  தொடங்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மிக விரையில் ஒப்பந்தங்கள் விடப்பட்டு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட இருக்கிறது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.