சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை கருவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், புற்றுநோய் பாதிப்புகளை கண்டறியும் வகையில் தமிழகத்தில் சேலம் உள்பட 6 மருத்துவமனைகளில் தலா ரூ.12 கோடி மதிப்பில் பெட் சிடி ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை, சேலம், திருவண்ணாமலை, திருவாரூர் மருத்துவமனையில் இருதய பாதிப்புகளை முழுமையாக கண்டறிய கேத் லேப் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் புதிய நியமனங்கள் செய்வது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. புதிய பணி நியமனங்கள் செய்வது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக 1,021 மருத்துவர்கள், 2241 செவிலியர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் நியமிப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கு முடிவுற்ற பின்னர் அந்த நியமனங்களும் செய்யப்படும் என்று கூறினார்.
தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் புகுந்ததாக சொன்னார்கள். உடனடியாக பொது சுகாதாரத்துறை இயக்குநரை அங்கு அனுப்பியுள்ளோம். வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க வேண்டும். மின்தடை பிரச்சினையை ஐ.ஓ.சி.எல் மூலம் டீசல் பெற்று நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெள்ள பாதிப்பு பகுதிகளில் நீர் வடிந்த பின்னர் 4 மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். சென்னையில் 300 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தினோம். அந்த மருத்துவக் குழுக்களை தென் மாவட்டங்களுக்கு அனுப்ப உள்ளோம். சென்னையில் நோய்த் தொற்று நடவடிக்கைகள் எடுத்தது போல, தென் மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் 23 மற்றும் 30 ஆம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றார்.
கொரோனாவைப் பொறுத்தவரை சிங்கப்பூர் மற்றும் கேரள மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. அங்குள்ள மருத்துவர்களிடம் பேசி வருகிறோம். மிதமான பாதிப்புதான் உள்ளது. கவலைப்படத் தேவையில்லை. வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று கூறினார்.
பேட்டியின் போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் முதல்வர் மணி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி துணை மேயர் சாராத தேவி உடன் இருந்தனர்.