அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 190 நடமாடும் மருத்துவ குழுக்கள் இன்று காலை முதல் செயல்பட்டு வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று (19.12.23) தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டியில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்களை திறந்து வைத்தும், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடப் பணிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவத்துறை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார துறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் தருமபுரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்வதில் பெரிய மாவட்டங்களை விட தருமபுரி மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்த பின் இதுவரையில் ஆறு பேர் தருமபுரி மாவட்டத்தில் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தருமபுரி மாவட்ட மக்களிடையே மனிதாபிமானமும், மனித நேயமும் அதிகமாக உள்ளது. உடல் உறுப்பு தானத்தில் தருமபுரி மாவட்டம் ஒரு புதிய வரலாறை படைத்துள்ளது.
தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் அதிக கன மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரண பணிகள் நடைபெற்று வரும் வேளையில் தென் மாவட்டங்களில் கன மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்த நான்கு மாவட்டங்களில் 54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் மழை நீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மழை நீர் புகுந்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புகுந்த மழை நீரை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றி, தற்போது அது வடிந்துள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தளம் வரையில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக அரசு உடனடியாக அங்கு மருத்துவ கல்வி இயக்குனரை அனுப்பி வைத்து, ஐசியுவில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அங்கு தொடர்ந்து மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை போன்று தென் மாவட்டங்களிலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று காலை முதல் 190 நடமாடும் மருத்துவ வாகனங்கள் திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர் ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர் ஒரு உதவியாளர் என நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு நாளைக்கும் தேவைக்கு ஏற்ப ஒரு இடம் அல்லது இரண்டு, மூன்று இடங்களில் முகாமிட்டு அங்குள்ள மக்களுக்கு மழைக்கால நோய்கள் வராதவாறு மருத்துவ உதவிகளை செய்து வருகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரும் அதிக கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.