ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தடையைமீறி ஆன்லைன் ரம்மி விளையாடுவோருக்கு இனி சிறை தண்டைனையும், அபாராதமும் விதிக்கப்படும்.


அரசிதழில் வெளியீடு:


ஆளுநரின் ஒப்புதல் கிடைத்ததை தொடர்ந்து ஆன்லைன் ரம்மி தடை மசோதா தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக  மசோத நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்து இருந்தர். இந்நிலையில் மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தடையை மீறி யாரேனும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடினால், இனி அவர்களுக்கு சிறைதண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.


சட்ட நடவடிக்கைகள்:


ஆன்லைன் சூதாட்ட தடைசட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட  அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விளையாடினால்  3 மாதம் சிறை  அல்லது ரூ.5000 அபராதம்  அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். சூதாட்டத்தை விளம்பரம்  செய்பவர்களுக்கு ஒராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே சேர்த்து விதிக்கப்படும். அதே நிறுவனம் மீண்டும் தவறு இழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 


புதிய ஆணையம்:


அடுத்தக்கட்டமாக  ஆன்லைன் விளையாட்டுகளை  ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்கப்படும். தலைமைச் செயலாளர் பதவிக்கு குறையாத பதவியை வகித்து ஓய்வுபெற்றவர்  ஆணையத் தலைவராக நியமிக்கப்படுவர்.  ஓய்வு பெற்ற ஐ.ஜி. மற்றும்  தகவல் தொழில்நுட்பத்தில்  நிபுணத்துவம் பெற்றவர்  ஆணைய உறுப்பினர்களாக இருப்பர். ஆன்லைன் விளையாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரும்  விளையாட்டு ஆணையத்தின்  உறுப்பினராக இருப்பார். ஆன்லைன் விளையாட்டை வழங்குவோரை ஆணையம் கண்காணித்து அவர்களை பற்றிய தரவுகளை பராமரிக்கும். ஆன்லைன் விளையாட்டை அளிப்பவர்கள் மீதான புகாரை  விளையாட்டு ஆணையம் தீர்த்து வைக்கும்.


அடுத்தடுத்து மசோதா:


முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 மாதங்களுக்கும் மேலாக ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர், மசோதாவை திருப்பி அனுப்பினார். அதைதொடர்ந்து,  கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார்.  சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.