சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது அவர் கூறியது, அரசியல் கட்சியினர் எதிர்பார்ப்போடு செயல்பட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் எந்த வித எதிர்பார்ப்போடு இல்லாமல் செயல்பட கூடியவர்கள். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல கூடிய பணிகளை மேற்கொள்பவர்கள் அரசு அதிகாரிகள் என்றும், அரசு அதிகாரிகளின் முன்னேற்றத்திற்கு, எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும் பேசினார்.



மேலும் கலைஞரிடம் படித்த பாடங்கள் தான் அதிகாரிகளிடம் வேலை வாங்க உறுதுணையாக இருந்து வந்தது.அரசிற்கு நல்ல பெயரை உருவாக்கிட அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். சேலம் மாவட்டத்திற்கு 1242 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் அறிவித்து உள்ளார். அரசு அதிகாரிகளோடு எப்போதும் துணையாக இருப்போம். அரசு அதிகாரிகளின் சுக, துக்கங்களில் பங்கேற்க உள்ளோம். சேலம் இரும்பாலையில் காலியாக உள்ள இடங்களில் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்திட அனுமதி பெற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.அனைத்து பணிகளும் நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இல்லாமல் இருந்ததை மாற்றி பதிவு உயர்வு வழங்கப்பட்டு உள்ளதாகவும், இது தவிர புதியதாக ஆட்கள் நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது என்று உறுதிபட கூறினார். கலைஞர் இருந்தவரை அரசு அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அதே நிலை தற்போது நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.



நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவிற்கு சேலம் மாவட்டத்தின் சார்பில் தந்தை பெரியார், முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி முகம் பதித்த உலோக சிற்பத்தை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பரிசாக அளித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலகங்களிலும் கலந்து கொண்டனர்.


கடந்த சனிக்கிழமை சேலம் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழகத்தில் ரூ.100 கோடியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.54.01 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.