சென்னையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜாம்” புயலாக தீவிரமடைந்துள்ளது. இதனால் ஆந்திர பிரதேசம் மற்றும் வட தமிழகம்-புதுச்சேரியை ஒட்டிய கடற்கரையோரங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “மிக்ஜாம்” தீவிரமடைந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 130 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அதேபோல்
14 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வடக்கு -வடமேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திராவில் நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே நாளை (டிசம்பர் 5) கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தரப்பில் மீட்பு பணியில் ஈடுபட அனைத்து துறை ஊழியர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதனிடையே மிக்ஜாம் புயல் காரணமாக இன்று (டிசம்பர் 4) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை நேற்று பகல் முழுவதும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் பெய்து கொண்டிருந்த மழை, இரவு நேரத்தில் இருந்து தொடர்ச்சியாக பெய்து வருகிறது. மேலும் மழையுடன் சேர்த்து காற்றும் பலமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிவு, தண்ணீர் தேக்கம் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் சென்னையில் படிப்படியாக மழையின் வேகம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழையின் அளவானது 150 மி.மீட்டரை தாண்டியுள்ளதாகவும், காலை 8.30 மணிக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் இன்று மாலை வரை பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சராசரியாக 13 மி.மீ. மழை பெய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.