திருச்சியில் கடந்த 23ஆம் தேதி  "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கபட்டது. இந்த கண்காட்சியை கல்லூரிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.


புகைப்பட கண்காட்சி:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70ஆவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்துள்ளனர். 


இந்த கண்காட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்ற  மாநாட்டு புகைப்படங்கள், மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டங்கள் மற்றும் அரசு திட்டங்கள் என திமுகவின் வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக இந்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.


இந்த புகைப்படங்களை பார்வையிடுவதற்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர். இந்த கண்காட்சியை நடிகர் ஜோ மல்லூரி சிறப்பாக வடிவமைத்திருந்தார்.


இதற்கிடையே, கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர், அங்கிருந்த வருகை பதிவேட்டில் சிவகார்த்திகேயன்  கையெழுத்திட்டார் . இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், "முதலமைச்சரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புகைப்பட கண்காட்சி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம்:


இந்த புகைப்படங்களை பார்க்கும்போது தெரிந்து கொண்டது என்னவென்றால் எவ்வளவு பெரிய உயரத்தை அடையணுமோ அதற்கு நிறைய வலிகளையும், தியாகங்களையும் தாண்டி தான் வரணும் என்று  தெரிகிறது. பெரிய ஆளுமை கொண்ட மாபெரும் தலைவரின் மகனாக இருந்தாலும் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தாண்டி நிறைய சாதனைகளைப் புரிந்து இந்த இடத்திற்கு தமிழக முதலமைச்சர் வந்திருக்கிறார்.  


ஒரு துறையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் அதை பார்க்கும் பொழுது  உந்துதலாக இருக்கும். ஆனால், இந்த புகைப்பட கண்காட்சியை காண்பவர்கள் எந்த துறை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மிகப் பெரிய ஈர்ப்பாக இருக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என்றைக்காவது ஒருநாள் பெருசாக ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை  ஏற்படுகிறது. 


டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு:


எனக்கு மிகவும் பிடித்த  நம்ம ஊர் திருச்சியில் நான் எங்கே எல்லாம் விளையாண்டு படித்தேனோ அந்த இடத்தில் இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்று நான் ஒரு சினிமா துறையின் நடிகராக வருவதை தாண்டி , திருச்சி பையன் மற்றும் ஒரு அரசு ஊழியரின் மகனாக இன்றைக்கு இந்த கண்காட்சியை பார்ப்பது என்பது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாக இருக்கிறது.


முதலமைச்சருடைய  சிறுவயது புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. முதலமைச்சர் ஜெயிலில் இருந்த காட்சிகள் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால், முதல்முறையாக இப்போதுதான் பார்க்கிறேன். முதல் தகவல் அறிக்கையின் நகல் எல்லாம் கண்டபோது மிகவும் வியப்பாக இருந்தது" என்றார்.


 



இதையடுத்து, சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படமும் ரஜினியின் ஜெயிலர் திரைப்படமும் ஒரே நாளில் திரைக்கு வருகிறதே என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, சிவகார்த்திகேயன் பதில் அளித்து கொண்டிருந்தபோதே, அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் நேரு வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.