தமிழக சட்டசபையில், கடந்த 14-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, இன்று முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலர்களின் நியமனம் குறித்து, முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள் நியமனம் எப்போது.?

இன்று தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது, இலத்தூர் ஊராட்சி மலையம்பட்டு கிராமத்தில் குழந்தைகள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும், காலியாக உள்ள பணியாளர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும், சட்டமன்ற உறுப்பினர் பாபு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், மலையம்பட்டு கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டிய தேவை எழவில்லை என்றும், அங்கன்வாடி பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, பணிச்சுமை அதிகம் இருப்பதால், எப்போது பணியாளர்களை நியமிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், அங்கன்வாடியில் 7,900 புதிய பணியாளர்கள் மற்றும் 8,900 சத்துணவு சமையலர்களை நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த நியமனங்கள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

அங்கன்வாடி பணியாளருக்கு விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணியில் சேர விருப்பமுள்ளவர்கள், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு தேர்வு எதுவும் நடத்தப்படாது.

தேர்வு முறை

இதற்கு எழுத்துத் தேர்வு கிடையாது. மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு இது நிரந்தர அரசு வேலையாக இருக்கும். 3 பணியிடங்களுக்கும் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பணியாளர்களை தேர்வு செய்ய குழு அமைப்பு

இந்த பணியிடங்களுக்கான ஆட்களைத் தேர்வு செய்வதற்கு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அதில், மாவட்ட திட்ட அலுவலர், துணை இயக்குநர், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர், மாவட்ட ஆட்சியரின் மதிய உணவுத் திட்ட உதவியாளர் உள்ளிட்டோர் இருப்பார்கள்.

அங்கன்வாடி பணியாளர்களின் தேர்வு முறை, இட ஒதுக்கீடு, விண்ணப்ப முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://drive.google.com/file/d/1nGKRA8p8iFE-pEfm5enXJASlCbQvUxFy/view என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம் என்று குழந்தைகள் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

அதோடு, இதுகுறித்த தகவல்களை நேரில் பெற விரும்புவோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை பிரிவினை அணுகலாம்.