தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு அளித்தது. ஆனால், அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படாமல் இருந்தது. பின்னர் பதவியேற்ற திமுக அரசு 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக அரசாணையை வெளியிட்டது.
அரசின் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? என்று கேள்வியெழுப்பியதோடு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' என்று சரமாரியாக கேள்வியெழுப்பியதோடு அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இதனால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசின் சார்பில் தமிழக அரசின் தலைமை செயலாளர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சட்டத்துறை மற்றும் உயர்கல்வித்துறை, பாமக மற்றும் வன்னியர் அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது ,சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, `10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைபெற்ற பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் மாற்றம் செய்யக் கூடாது' எனவும் `இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது' எனக் குறிப்பிட்டுவிட்டு பிப்ரவரி மாதத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
அதன்படி, இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்தில் நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய், அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயமாக இருந்தாலும் இன்னும் பெரிய கல்வி நிலையங்களை நடத்தவிடமுடியவில்லை. மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற பணிகளில் மிகக்குறைவான இடங்களிலேயே இவர்கள் இருக்கிறார்கள். சுமார் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் தான் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மோசமான நிலையில்தான் உள்ளது. பல இடங்களில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினைரை போன்ற பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இன்னும் சில இடங்களில் அதைவிட மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்று பாமக தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், வன்னியர் சமுதாய பெண்களில் 95% பேர் கூலி வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் தான் இன்றும் இருக்கின்றனர். மர வேலை,பீடி சுற்றும் வேலை, சாலை போடுதல், கழிவறைகளை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளை எல்லாம் செய்கின்றனர். நிறைய பேர் நிறைய இடங்களில் மலம் அள்ளும் வேலைகளைக்கூட செய்கின்றனர். திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பிணங்களை எரிக்கும் வெட்டியான் வேலைகளை செய்கின்றனர். சுடுகாடுகளில் தான் வசிக்கின்றனர். வன்னிய குல மக்கள் இன்னும் பல இடங்களில் ஏழைகளாகவும், வறுமை மிகுந்தவர்களாகவுமே உள்ளனர். இதனால் வன்னியர் சமூகத்திற்கு இடஒதுக்கீடு தேவை என்று வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப்பயன்படுத்தி தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது; அரசுக்கு அதிகாரம் இருக்கிறது; ஆனால் அதை பயன்படுத்தக்கூடாது என்பது போல் எதிர்தரப்பினரின் வாதம் இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கின் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் மார்ச் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நீதிபதிகள் எல். நாகேஸ்வர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை இன்று வழங்கியது. இத்தீர்ப்பில், 1994ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில் இந்த உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. உள் இடஒதுக்கீடு வழங்கப்படும்போது விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில், ஜாதிய ரீதியிலான உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், உள் இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தரவேண்டும். இச்சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதைக் கொண்டுவந்த அதிமுக அரசு சரியான வழிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. எனவே இந்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசர கோலத்தில் அதிமுக ஆட்சியில் சரியான தரவுகள் இன்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகவே உச்சநீதிமன்றம் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
10.5 இடஒதுக்கீடு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்