நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜீன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 


பொதுவாக காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்தாண்டு சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தார். 


இதனிடையே காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரானது குறைவதும், அதிகரிப்பதுமாகவும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  அதேசமயம் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 334 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று அணைக்கு வரும் நீரின் அளவு 346 கன அடியாக அதிகரித்துள்ளது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பயன்படுகிறது. 


இதுவரை 89 ஆண்டுகள் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை 90வது ஆண்டாக நீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.