தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் குமரிக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அணைகளில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதாலும், சில இடங்களில் குளங்கள் உடைப்பெடுத்ததாலும், தொடர்ச்சியாக மழை பெய்த காரணத்தாலும் நகரப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்தது. இதனைத் தொடர்ந்து எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் இரு மாவட்டங்களிலும் முகாமிட்டு மீட்பு பணியை தீவிரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை என அனைத்து துறைகள் தரப்பில் மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஏரல் பகுதி முழுவதும் மழை நீர் சூழப்பட்டு வெள்ளக்காடாய் மாறியது. அப்பகுதி மக்கள் தொலை தொடர்பு இல்லாமல் தவித்து வந்தனர். இந்த பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இருந்தது தெரிய வந்தது. சுமார் 3 நாட்கள் எந்த தொலை தொடர்பும் இல்லாமல், தண்ணீர் சூழ்ந்த நிலையில் சிக்கியுள்ளார். 3 நாட்களுக்கு பின் இன்று காலை தீயணைப்பு துறை அதிகாரிகள் மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர் மற்றும் அங்கி சிக்கிய பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.