பொதுத் தேர்வு பாடத் திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டப் பள்ளிகளிலும் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு, மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுபவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா விடை வங்கியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (டிச.20) வெளியிட்டார்


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது:


2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள்


''பொதுத் தேர்வுக்கு உதவும் வகையில் சுமார் 2 லட்சம் வினா வங்கி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இவற்றை மாநிலம் முழுவதும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர்களின் உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் இந்த புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையானது பொழிந்துள்ளது. இந்த மாவட்டங்களில் பெய்த மழையானது எதிர்பாராததாகும். சென்னையில் வழங்கப்பட்டதுபோல அங்கும் இணை இயக்குனர்களின் உதவியோடு பள்ளிகள் சீரமைக்கப்பட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.


இணைய வழி சேவைகள் தொடக்கம்


மாணவர்களுக்கு சுலபமாக 14 நாட்களுக்குள் தொலைந்துபோன சான்றிதழ்கள் கிடைக்க, இணைய வழி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.


அங்கு கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வந்த மழையானது தற்போது சற்று குறைந்துள்ளது. இதன் பிறகு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் கணக்கிடப்பட்டு உடனடியாக சீரமைக்கப்படும்.


மழையால் பாதிக்கப்பட்ட இந்த நான்கு மாவட்டப் பள்ளிகளில் பாதுகாப்பான சூழல் திரும்பிய பிறகு, பள்ளிகள் திறக்கப்படும். அதன்பிறகு மாணவர்கள் அரையாண்டுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.


சனிக்கிழமைகளிலும் பள்ளிகள்


பொதுத்தேர்வு பாடத்திட்டங்கள் நிறைவு பெறாமல் இருந்தால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்தப்படும். 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்கும் எண்ணம் எதுவும் இல்லை. திட்டமிட்ட தேதிகளில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது''.  


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.


பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வினா விடை வங்கி தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 12ஆம் வகுப்புக்கு அறிவியல் பாட வரிசை மாதிரி வினாத்தாள், கலைப் பாட வரிசை மாதிரி வினாத்தாள், இயற்பியல் தீர்வுப் புத்தகம் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழிப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு, ஜனவரி மாத முதல் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.