பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளதாக, திமுகவை சேர்ந்த ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் நலமா?


பெங்களூர் நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரிமங்கலம் பகுதியில் பயணம் மேற்கொண்ட போது லேசான நெஞ்சு வலி ஏற்ப்பட்டதால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.


மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் நாராயண ஹிருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனைகள்  மேற்கொள்ளபட்டது. ECG, ECO மற்றும் எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்பட்டதில் அமைச்சருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும்,   உணவு ஓவ்வாமை காரணம் சிறு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதுவும் தற்போது சரியாகிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அலைச்சல் காரணமாக அவருக்கு ஓய்வு தேவை என்பதற்காக மருத்துவமனையில் தங்கி இருந்து நாளை டிஸ்சார்ஜ் ஆவார்” எனவும் பிரகாஷ் தெரிவித்தார். 


மருத்துவமனை அறிக்கை:


இதனிடையே, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை,  முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட திமுக செயலாளருமான பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் அன்பில் மகேஷ் நலமுடன் உள்ளா. மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்று வீடு திரும்புவார்” என கூறினார். முன்னதாக மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையிலும், அமைச்சர் உடல்நிலை சீராக உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.


நடந்தது என்ன?


சேலத்தில் நடைபெற்ற சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி செயல்பட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், அமைச்சர் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான அனுமதி ஆணைகளை வழங்கினார். பின்பு, கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக சென்றபோது, அமைச்சர் அன்பில் மகேஷிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.  அங்கு திமுக பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து அமைச்சரை சந்தித்தனர்.


பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி:


தொடர்ந்து, காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் இருந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மேல் சிகிச்சைக்காக பெங்களூர் நாராயணா ஹிருதாலயா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அமைச்சரின் உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத பல்வேறு தகவல்கள் பரவின. இதற்கிடையே அமைச்சர் அன்பில் மகேஸூடன் இருப்பவரும் உதயநிதி ஸ்டாலின் நல சங்கத்தின் பொருளாளர் ராஜா தமிழ் மாறன், ’’அன்பில் அண்ணன் நலம் , தற்போது காரில் தன் பயணத்தை தொடர்கிறார்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.