தமிழ்நாடு அரசு ஸ்டாலினிசத்தை தான் பின்பற்றுவதாக, சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.


சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு:


பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்  2023-2024 ஆம் ஆண்டிற்கான, பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, சட்டப்பேரவையில் பேசினார். அப்போது “ பாவேந்தர் பாரதிதாசனின் பாணியில் உலக அரசியலை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், இரண்டு பசுமாடுகளின் உரிமையாளர் பசுமாடுகளை தானே வைத்துக்கொண்டு அந்த பாலை பயன்படுத்தி வந்தால் அது ஜனநாயகம். இரண்டு பசுமாடுகளின் உரிமையாளர் ஒரு பசுமாட்டை தானே வைத்துக்கொண்டு மற்றொன்றை இல்லாதவருக்கு வழங்கினால் அது சோசியலிஸம். அதுவே இரண்டு பசுமாடுகளை விற்று அதற்கு பதிலாக ஒரு காளை மாட்டை வாங்கி அதை மிகப்பெரிய பண்ணையாக உருவாக்கி ஆட்களை பணியமர்த்தி செய்கின்ற நிர்வாகத்தின் பெயர் முதலாளித்துவம். இரண்டு பசுக்களையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டு, பாலை மற்றும் இலவசமாக பெற்றுக்கொண்டால் அது கம்யூனிசம். இரண்டு பசுக்களையும் அரசாங்கமே உரிமையாளர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவர்களிடமே பாலை விற்றது என்றால் அது பாசிசம். இரண்டு பசுக்களையும் அரசாங்கமே உரிமையாளர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு, அவர்களை சுட்டுக்கொன்றால் அது நாசிசம். ஆட்ற மாட்ட ஆடி கறந்து, பாட்ற மாட்ட பாடி கறந்து அரசாங்கத்தின் திட்டம் என்கிற பாலை இல்லாதாவர்கள் இல்லங்களில் சரியாக முறையாக சேர்க்கின்ற நிர்வாகத்தின் பெயர் ஸ்டாலினிசம். என்னுடைய அரசியல் ஆசான் முதலமைச்சர் ஸ்டாலின் தான்” என அன்பில் மகேஷ் பேசினார்.


திட்டங்களை அறிவித்த அமைச்சர்:


தொடர்ந்து பேசிய போது ”25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும். ரூ.175 கோடியில் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ரூ.9 கோடியில் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த அரசு, ஆசிரியர்களை ஒரு போதும் கைவிடாது. நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 68.47 கோடி பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர். 6 ஆயிரம் வகுப்பறைகள் புதிதாக கட்டப்பட உள்ளது.


10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும். ரூ.175 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் 2996 அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 540 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்படும். ரூ.150 கோடியில் 7500 அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 


ரூ.9 கோடியில் விளையாட்டு சிறப்பு பள்ளிகள் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் இரண்டு விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும். வேலை வாய்ப்புத் தேடி தமிழ்நாட்டிற்கு வரும் பிற மாநிலத் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களின் தாய் மொழியுடன் தமிழில் பேசவும், எழுதவும் ஏதுவாக தொடங்கப்படும்” உள்ளிட்ட திட்டங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.