வடக்கில் சிற்றாறு ஒன்று கடலில் சேரும் கழிமுகத்தில் ஊர் தொடங்குகிறது. நீண்ட மணல் செறிந்த அகலமான கடற்கரை அதன் கிழக்கு எல்லை. இதன் ஒரு பகுதி படகுகள் நிறுத்தப்படுமிடமாகவும்,மீன்கள் வந்திறங்கும் தளமாக செயல்படுகிறது. கிழக்கில் வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி பாறையும் மணலுமான ஒரு சிறு குன்றாகும். இந்தக் குன்றின் வடபகுதி மணல் செறிந்த கடற்கரையாகவும், தென்பகுதி பாறைகள் மிகுந்த கடற்கரையாகவும் உள்ளது. தீபகற்ப முனையில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. பெரிய மணல் தேரிகள் ஊரின் தென்மேற்குப் பகுதியெங்கும் காணப்படுகின்றன. இத்தேரிகளில் பனை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பனைமரங்களும், வேப்ப மரங்களும், சீமை ஒடை மரங்களுமே இந்நிலப் பகுதியில் பரவலாகக் காணப்படும் தாவரங்களாகும்.

 



 

மணலும் காற்றும் நிறைந்த இவ்வூரில், மணல் காற்றில் வீசும் போது ஒரு பாட்டிசைப்பது போல் உள்ளதால் இதற்கு மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.



தூத்துக்குடியிலிருந்து, ஆத்தூர், திருச்செந்தூர், குலசேகரன்பட்டிணம் வழியாக, கன்னியாகுமரி வரை வளைந்து நெளிந்து ஏற்றமும் இறக்குமாக செல்லும் இரு வழிச் சாலைதான் மணப்பாடு செல்வதற்கான பிரதான வழியாகும்.

 

தொழில்களும், பொருளாதாரமும்

மணப்பாட்டின் பொருளாதாரம் கடலையும், பனையையும் சார்ந்துள்ளது. கட்டு மரங்கள், வள்ளங்கள் மூலம் இங்கு பிடிக்கப்படும் மீன்கள் பனியிலிடப்பட்டு பல்வேறு ஊர்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன. எஞ்சிய மீன்கள் காயவைத்துக் கருவாடாகவும் ஆக்கப்படுகின்றன. மீன் பிடிப்பது, வலைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றை மீனவர்கள் கவனிக்கின்றனர்.

 

கத்தோலிக்க கிறித்தவ மதமே இங்கு நிலவும் முக்கிய மதம். மணப்பாடு கடற்கரை கிராமத்தில் போர்ச்சுகீசிய முறையில் கட்டப்பட்டு உள்ள பாரம்பரியம் மிக்க பல தேவாலயங்கள், மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்த ஊரில் இருப்பதாலும், கத்தோலிக்க கிறிஸ்தவ மதச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாலும் இவ்வூர் “சின்ன ரோமாபுரி” என்று அழைக்கப்படுகிறது.



 

தீபகற்ப குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் உருவாக்கியது என்றும் நம்பப்படுகிறது. இவ்வாலயத்தில் கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு என்று நம்பப்படும் பொருள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கி.பி.1540 ஆம் ஆண்டில் போர்ச்சுகீசியர்களின் பாய்மர கப்பல் சூறாவளியில் சிக்கிய போது அதில் இருந்தவர்கள் செய்த ஜெபத்தால் பாதுகாப்பாக மணப்பாட்டில் கரை ஒதுங்கியதாகவும் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போர்ச்சுகீசியர்கள் மணல் குன்றின் மீது 10 அடி உயர சிலுவை வைத்ததாகவும் கூறப்படுகிறது.

 

மேலைக் கட்டட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன. 



மணப்பாட்டில்  புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது. தீபகற்பத்தின் முனையில் இருக்கும் குகையில் புனித சவேரியார் தங்கி இருந்து உள்ளார். வெளியூர் மட்டுமல்ல உள்ளூர் மக்களும் இக்குகைக்கு வந்து ஆழ் தியானம் செய்கின்றனர். குகைக்குள் 20 அடி ஆழமான நன்னீர் ஊற்று உள்ளது. குகை அமைந்துள்ள பகுதி கடலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் உள்ளது.அப்படி இருந்தாலும் கூட குகைக்குள் அமைந்துள்ள கிணற்று நீர் நன்னீராக உள்ளது. இதனை புனித நீராக தலையில் தெளித்தும் கண்களில் ஒற்றி கொண்டும் வீடுகளுக்கு பாட்டில்களில் பிடித்து கொண்டும் செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.



மணப்பாடு ஊரை சுற்றிலும் மூன்று பக்கமும் கடல், ஒருபக்கம் அமைதியாக கடல் மணல் மேடாக இருக்க, இன்னொரு புறம் ஆர்ப்பரிக்கும் கடலில் பாறைகளும் அமைந்து உள்ளது. கடலில் விளையாட ஆசை இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் ஏனெனில் ஆர்ப்பரிக்கும் கடல், திடீரென உருவாகும் இயற்கை மணல் திட்டுகள்.



மணப்பாடு கடற்கரையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்தமர்ந்து ஓய்வெடுக்கும் பகுதியாக உள்ளது. மணப்பாடு வரும் சுற்றுலா பயணியர்களை கவரும் வகையொல் அலைச்சறுக்கு, படகு போட்டி, பாய்மரக்கப்பல், துடுப்பு படகு போட்டி நடத்த ஏற்ற இடமாக உள்ளது மணப்பாடு.

 பார்க்க பார்க்க, ரசிக்க ரசிக்க அலுக்காத கடற்கரை கிராமத்துக்கு வாங்க ரசிக்கலாம்.