பசும் பாலை லிட்டருக்கு 45 ரூபாய்க்கும் எருமை பாலை லிட்டருக்கு 55 ரூபாய்க்கும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், பாஜக சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 


"தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதையும், பால் கொள்முதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்" எனறு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷாவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் மாநில அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் மட்டுமல்லாது பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஆவின் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அப்போதெல்லாம் ஆவின் பற்றிய கவலைப்படாத முதலமைச்சர் இப்போது ஆவின் நிறுவனம் குறித்து கவலைப்பட்டிருக்கிறார்.


அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்ய வேண்டும்


ஆவின் நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் நெருக்கடிகளை, இழப்பை சந்திப்பதற்கு அமுல் போன்ற நிறுவனங்கள் காரணம் அல்ல. பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காததும், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை திறம்பட கையாளததும்தான் காரணம். இன்று தமிழகத்தில் சாதாரண ஏழை குடும்பத்தினரும், ஒடுக்கப்பட்ட மக்களும்தான் கறவை மாடுகளை வளர்க்கின்றனர்.


அவர்களிடம் இருந்து அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்தாலே ஆவின் நிறுவனத்திற்கு எக்காலத்திலும், எந்தப் பிரச்னையும் வராது. கறவை மாடுகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. பிள்ளையை வளர்ப்பதுபோல கடினமானது. கடும் உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். புற்கள், வைக்கோல், தீவனங்கள் என பெரும் செலவும் ஏற்படும். முன்பு மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கப்பட்டன. இப்போது அவை வெகுவாக குறைந்து விட்டது.


மாடுகள் வளர்ப்பவர்களுக்கு பெரும்பாலும் சொந்தமாக நிலம் இருக்காது. அதனால், மாடுகளை மேய்ச்சலுக்கு விட மேய்ச்சல் நிலங்கள் இருப்பதில்லை. ஆண்டில் மூன்று, நான்கு மாதங்களுக்கு பசும் புற்கள் கிடைக்கின்றன. மற்ற நாட்களில் வைக்கோல், சிறுதானிய தட்டைகளை வாங்கி தான் மாடுகளுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. இவ்வளவு கஷ்டப்பட்டு, செலவு செய்து மாடுகளை வளர்த்து பாலை கொண்டுச் சென்றால் லிட்டருக்கு ஆவின் நிறுவனம் ரூ. 32 முதல் ரூ. 34 வரை தான் கொடுக்கிறது. அதுவும் பால் அதிகம் கிடைக்கும் காலங்களில், பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் வாங்குவதில்லை. கொரோனா காலத்தில், பால் உற்பத்தியாளர்கள் கொண்டுச் சென்ற பாலில் பாதியளவு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பால் பொருட்கள் விற்கவில்லை என்றால், பால் உற்பத்தியாளர்களிடம் கட்டாயப்படுத்தி விற்கும் நிலையும் அடிக்கடி நடக்கிறது.


பசும் பாலை லிட்டர் 45 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்


பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழைகளின் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். பசும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 45-ம், எருமைப் பாலுக்கு ரூ. 55-ம் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும். குறைந்தது 50 சதவீத மானியத்தில், மாடு வளர்க்க விரும்பும் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் எல்லாக காலங்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும். கிராமங்களில் அரசு புறம்போக்கு நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்ற வேண்டும்.


இதனை செய்தால் அமுல் மட்டுமல்ல, ஆயிரம் நிறுவனங்கள் வந்தாலும் ஆவினை பால் உற்பத்தியாளர்கள் கைவிட மாட்டார்கள். பொதுமக்களும் ஆவின் தவிர மற்ற நிறுவனங்களின் பொருட்களை வாங்க மாட்டார்கள். எனவே, உண்மையில் உள்ள சிக்கல்களை களையாமல், அமுலை வைத்து அரசியல் நடத்த நினைத்தால் எதுவும் நடக்காது. இதனை உணர்ந்து ஆவினை முதல் இடத்திற்கு கொண்டு வரவும், கறவை மாடுகளை வளர்க்கும் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களை காக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.