பால் கொள்முதல் விலை குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக பால் உற்பத்தியாளர் நல சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை முதல் திட்டமிட்டபடி பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் பால் உற்பத்தியாளர் நல சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவினுக்கு தினமும் 5 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்வது பாதிக்கப்படும் என்றும் நல சங்கத் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திரன், மார்ச் 10ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்களைச் சேர்ந்த உற்பத்தியாளர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தும், சங்கங்கள் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஏழு நாட்கள் அறவழிப் போராட்டம் நடைபெறும், அரசு செவி சாய்க்கவில்லையெனில் மார்ச் 17ஆம் தேதி கறவை மாடுகளுடன் சாலை மறியல், தொடர் பால் விற்பனை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, தற்சமயம் ஒரு லிட்டர் பாலை 32 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தான் ஆவின் பால் மற்றும் இதர பால் பொருள்களை உற்பத்தி செய்யும் நிலையில், ஆவின் நிறுவனத்துக்கு வழங்கப்படும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் 7 ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் தனியார் நிறுவனங்கள் பால் கொமுதல் விலையை 42 ரூபாயிலிருந்து 46 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களை தேர்வு செய்வதாகவும் முன்னதாக பால் உற்பத்தியாளர் சங்க துணைத்தலைவர் கோவிந்த பாண்டியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் பேசியதாவது:
குறைந்தபட்சம் ஒரு லிட்டருக்கு 10 ரூபாய் நாங்கள் உயர்த்திக் கேட்டோம். 32இலிருந்து ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு ரூ. 41லிருந்து 51 ரூபாயாகவும் உயர்த்திக் கேட்டிருந்தோம். ஆனால் பால் கொள்முதல் விலைக்கு 3 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டதே ஒழிய, மீதி கோரிக்கைகள் அரசு தரப்பில் அப்படியே கிடப்பில் உள்ளன.
கோப்புகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, அதனை இந்த முறை அமைச்சரும் பால் விற்பனை கமிஷனரும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும்கூட இன்றைய காலக்கட்டத்தில் பாலுக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு ஆவின் நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது.
பால் உபரி இந்தியாவின் எந்த மாநிலத்திலும் கிடையாது. கடந்த 1ஆம் தேதி அறவழியில் எங்கள் அதிருப்தியை அரசுக்கு தெரியப்படுத்தி இருந்தோம். ஆனாலும் நேற்றைய தினம் பால் உற்பத்தித் துறை அமைச்சர் எங்களை அழைத்தார். ஆனால் இன்றைய பேச்சுவார்த்தையில் “முதலமைச்சரை கலந்தாலோசித்து தான் கூற முடியும், எங்களால் எந்த உத்தரவும் தர முடியாது” எனக் கூறினார்கள்.
கடந்த முறை சொன்னது போல் காலவரையறையை நிர்ணயிக்காவிட்டால் நாங்கள் பால் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் ஆவின் நிறுவனத்துக்கு தொடர்ந்து பால் வழங்குவதை நிறுத்திவிடுவோம். நாளை தினம் காலை முதல் தமிழ்நாட்டின் கிராம சங்கங்கள் மூலம் ஆவின் ஒன்றியங்கள், ஆவின் இணையத்துக்கு பால் கொள்முதல் படிகள் முற்றிலும் தடைபடும்.
கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இதுவ்ரை நாங்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தோம். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை, எங்கள் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலையை, தனியாருக்கு நிகராக அரசு வழங்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.