சென்னையில் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிக்கி திணறி வருகிறார்கள். காலையில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலக பணி செல்வோர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம், கிண்டி, தேனாம்பேட்டை, விம்கோ நகர் என பல இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயிலால் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று சேர முடிகிறது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டங்கள்
இதனையடுத்து இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலான (ஆரஞ்சு லைன்) திட்டம். இதில் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான டபுள்டக்கர் மெட்ரோ ரயில் திட்டம் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் ஐடி ஊழியர்களுக்கு அதிக அளவில் பணியாற்றி வருவதால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த திட்டம் எப்போது தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அந்த வகையில் இந்த பாதையில் தற்போது 99% பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்த போரூர்- பூந்தமல்லி இடையே சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் வடபழனி வரை சோதனை ஓட்டம் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 15ஆம் தேதிக்குள் சோதனை ஓட்டம் தொடங்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் எப்போது இயக்கம்.?
இதனையடுத்து இந்த பணியை விரைவுப்படுத்தும் வகையில் சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உயர்மட்ட ஸ்லாப்கள் அமைக்கும் பணியில் சுமார் 3 ஆயிரம் பணியாளர்களும், தண்டவாளம் மற்றும் சிக்னல் அமைக்கும் பணியில் ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்ட கிரேன்கள் உதவியோடு 7 குழுக்களாக இரவு பகலாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பூந்தமல்லி- போரூர் இடையிலான முதல் கட்ட மெட்ரோ பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது .மக்கள் பயன்பாட்டிற்கு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பூந்தமல்லி- வடபழனி இடையிலான பணிகளில் ஒரு ரயில் நிலையத்தின் பணி மட்டும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வருகிற ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.