கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்ற நிலையில், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைப்படி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டது.




அதனை தொடர்ந்து, மே 10-ம் தேதி காலை 4 மணி முதல் மே 24-ம் தேதி காலை 4 மணி வரைஇரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மே 10ம் தேதி அதிகாலை 4 மணி முதல் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி சேவைகளை தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவையும் மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 10ம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்து மே 24ம் தேதி அதிகாலை 4 மணி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படாது. 




ஏற்கனவே கொரோனா தொற்றின் முதல் அலையின் போது, மார்ச் 24ம் தேதி முதல் - செப்டெம்பர் 6ம் தேதி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மெட்ரோ ரயில் சேவை சென்னையில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புறநகர் ரயில் சேவையிலும் அத்தியாவசிய பணிகளில் உள்ள பயணிகள் மட்டுமே உரிய அடையாள அட்டையுடன் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் போது போக்குவரத்து என்பது முற்றிலுமாக நிறுத்தம் செய்யப்படவுள்ளது.




சென்னையில் அடுத்தடுத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு வரும் நிலையில் வேலைக்காக சென்னையில் தங்கியிருக்கும் பலர், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பத்துவங்கியுள்ளனர். இதனால் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளை வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால் நாளை வரை சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மெட்ரோ  சேவை நிறுத்தம் சென்னையை மேலும் வெறிச்சோடச் செய்யும். அதுமட்டுமின்றி இந்நேரத்தில் ரயில் இயக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.