புயல் கரையை கடக்க தாமதம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 08.30 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 02-12-2023 வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
5ஆம் தேதி புயல் கரையை கடக்கும்
இந்நிலையில், தற்போது புயல் கரையை கடப்பது தாமதமாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, டிசம்பர் 5ஆம் தேதி முற்பகலில் நெல்லூர் - மசூலிப்பட்டினத்துக்கு இடையே புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 740 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு டிசம்பர் 3ஆம் தேதி புயலமாக மாறுகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டில் கடற்கரை பகுதியை டிசம்பர் 4ஆம் தேதி புயல் நெருங்கும். பின்னர், நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5ஆம் தேதி புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை:
02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.