தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வானிலை ஆய்வு மைய அறிக்கை:


இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இன்றும், நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ்  அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் சென்டிமீட்டர் அளவில் மழை ஏதும் பதிவாகவில்லை என கூறப்படுகிறது.


வாட்டி வதைக்கும் வெயில்:


நடப்பாண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் வெயில் அதிகரிக்க தொடங்கியது. இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட, அதிகமாக இருக்கும் என ஏற்கனவே ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து வருகிறது.


12 மாவட்டங்களில் 100-ஐ தொட்ட வெப்பநிலை:


நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்தது. அதிகபட்சமாக ஈரோடு மற்றும் கரூர் பரமத்தியில் 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. திருப்பத்தூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா 103 டிகிரி வெயிலும்,  மதுரை விமான நிலையம், கோவை, தர்மபுரி மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் 102 டிகிரி வெயில் பதிவானது.


சென்னையில் சதம்:


நடப்பாண்டில் முதல் முறையாக சென்னையில் நேற்று வெயில் சதம் அடித்தது. சென்னை மீனம்பாக்கத்தில்  101 டிகிரி வெயில் பதிவானது. பாளையங்கோட்டையில் 100 டிகிரி வெயில் பதிவானது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வீட்டில் முடங்கும் மக்கள்:


கொளுத்தும் வெயில் காரணமாக சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் செல்கின்றனர். மூத்த குடிமக்கள் பலரும் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்குகின்றனர். நண்பகல் நேரங்களில் பல பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.