டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழந்து சென்னை அருகே நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று 5 மாவட்டங்களுக்கும், நாளை 3 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாகவும், மணிக்க 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பதூர், கடலூர், புதுச்சேரிக்கு மஞ்சள் அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
நாளை(03.12.25)
இதேபோல், நாளை ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
04.12.25 முதல் 08.12.25 வரை
வரும் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று (02-12-2025}: வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(03-12-2025)
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழ்நாட்டின் வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகள், தென் கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.