கடலூரில் வெள்ள நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் வீட்டு வாசலில் ஓடும் வெள்ள நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்த பழனி என்பவரின் ஒன்றரை வயது குழந்தை அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தையை இழந்து வாடும் பழனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மேல்பாதி கிராமத்தில் உள்ள பொத்தேரியில் நீர் நிரம்பி, வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் வழியாக பாளையங்கோட்டை பெரிய ஏரிக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வெள்ள வடிகால் வாய்க்காலின் ஓரத்தில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தான் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்துள்ளது.
5 ஆண்டுகள் ஆகியும் சரிசெய்யப்படாத மதகு
பொத்தேரியில் இருந்து வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்த ஏரியிலிருந்து நீரை வெளியேற்றும் மதகு சில வருடங்களுக்கு முன்பு சேதமடைந்ததால், அதிகப்படியான நீர் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாய்க்காலில் ஓடியதால் தான் அதில் தவறி விழுந்த குழந்தை வேகமாக அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்து விட்டது. சேதமடைந்த மதகை சரி செய்ய வேண்டும் என்று ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை அனைவரிடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால், ஐந்தாண்டுகளாகியும் மதகு சரி செய்யப்படாததால் அப்பாவி குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பொத்தேரியின் சேதமடைந்த மதகை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
மழையால் மக்கள் பாதிப்பு
வடதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. டித்வா புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக வடசென்னையில் சில பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.