தமிழ்நாட்டில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது. கரூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்.
மனதை குளிர்விக்கும் மழை:
இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் வகையில் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறைந்து பல மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக தென்காசி, மதுரை, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வேலூரில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் ஈரோடு, கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.
அந்த வகையில், இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு:
அதேபோல் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
வரும் 15 ஆம் தேதி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து காணப்படும் நிலையில் மக்கள் வெப்ப அலையில் இருந்து தப்பியுள்ளனர். அடுத்த வாரம் அல்லது இந்த வார இறுதியில் சென்னையில் நல்ல மழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கோடை மழையால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உஷ்ணம் குறைந்துள்ளது.