விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி லட்சுமி அழகுபிரியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவியாக உள்ளேன். நான் அதிமுக கட்சியை சேர்ந்தவர்.தற்போது திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்த நிலையில் என் மீது 4 விதமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

 

அதில், முறைகேடாக டெண்டர் ஒதுக்கீடு செய்ததாகவும், எனது பணியில் கணவர் தலையீடு இருப்பது போன்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டது. இந்த விளக்க நோட்டீஸ் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் ராஜபாளையம் வட்டாட்சியர் என்னை பஞ்சாயத்துத் தலைவி பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிவிப்பினை வெளியிட்டார். இது தமிழ்நாடு பஞ்சாயத்து தலைவர் சட்ட விதிகளுக்கு எதிரானது.

 

எனவே, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட மேலபட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவி பதவியிலிருந்து என்னை நீக்கம் செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் வெளியிட்ட அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்தநீதிபதி அப்துல் குத்தூஸ், "மேலப்பட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து தலைவியை பதவியிலிருந்து நீக்கம் செய்து ராஜபாளையம் வட்டாட்சியர் பிறப்பித்த அறிவிப்பினை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 



 

அருந்ததியர் இன மக்களுக்கு என அரசு புறம்போக்கு மயானம் அமைத்து தர  உத்தரவு 

 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, கல்லூத்து கிராமத்தில் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவன். இந்த கிராமத்தில் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களின் உடலை அருகிலுள்ள நீர்நிலையின் கரையில் தகனம் செய்கின்றனர்.மேலும் மற்ற மயானத்தில் தகனம் செய்ய எங்களுக்கு அனுமதி இல்லை. இன்று வரை எங்களுக்கென்று தனியான மயானம் எதுவும் வழங்கப்படவில்லை.

 

எனவே, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, கல்லூத்து கிராமத்தில் அருந்ததியர் இன மக்களுக்கு என அரசு புறம்போக்கு நிலத்தில் 10 சென்ட் ஒதுக்கி மயானம் அமைத்து தர உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.