சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை  நிலைநிறுத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமானது நேற்று நடைபெற்றது.


இதில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், திராவிட கழக தலைவர் கி வீரமணி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதில் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலினத்தவரை நுழைய விடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். பின்னர் ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தலைவர்கள் கூறியதாவது:


திராவிட கழக தலைவர் கி. வீரமணி மேடை பேச்சு: 


கோவிலை திறப்பதை விட அதனை நிரந்தரமாக மூடி விட்டாலும் நான் அதை வரவவேற்பேன். ஆனால் இப்பொழுது கோவிலை திறக்க கூறுவது பக்திக்காக அல்ல, புத்திக்காக சமத்துவதுக்காக. கோவில்களில் நுழைய விடாத இந்த சம்பவத்திற்கு பின்னால் ஆழமான பின்னணி இருக்கிறது, இதை உணர்வுபூர்வமாக மட்டும் அணுக கூடாது.


திருவிழாக்கள் என்பது  இப்பொழுது ஜாதி கலவரங்களை ஏற்படுத்தும் களமாக மாற்றபட்டு வருகிறது. தற்பொழுது நடைபெற்று வருவது மனித உரிமைக்கான போர், தமிழக அரசு உடனடியாக  இதற்கான பரிகாரத்தை தேட வேண்டும். இந்த சூழ்நிலை தொடர கூடாது, தொடர்ந்தால் அது யாருக்கும் நல்லதல்ல என்று கூறினார் 


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா மேடை பேச்சு:


சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் கோவிலுக்கும் நுழைய ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம் இது மிக பெரிய அவலம். மேல்பாதியில் நடந்திருப்பது மிகப்பெரிய அநீதி, இது போன்ற செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று கூறினார்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மேடை பேச்சு: 


சாதி ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.கோவில் என்பது கடவுளை வழிபடுவதற்கான இடம் , எனவே கோவில் என்பது பொதுவானதாக தான் இருக்க வேண்டும், தனியார் கோவில் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
கோவிலுக்குள் விடாதவர்கள் மீதும் வழக்கு இருக்கிறது , கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க கூறுவோர் மீதும் வழக்கு இருக்கு. இது சமத்துவம் அல்ல , காவல்துறைக்கு உள்ளே இருக்கிற ஜாதி வெறி ஒருசிலரை ஆட்டிப்படைக்கிறது.


இதற்கு மேலும் அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காது என்றால் நாங்களே சென்று காவல்துறை, அரசு செய்ய தவறிய காரியத்தை  செய்வோம்,   அந்த கோவிலில் வைக்கபட்டிருக்கும் சீலை உடைத்துக் கொண்டு தலித் மக்களை உள்ளே அழைத்து செல்வோம். வட மாவட்டங்களில் இது போன்ற செயல்கள் நடக்க பாமக தான் காரணம், கேவலம் ஓட்டு வாங்க எதை வேண்டுமானாலும் செய்வதா? சீல் வைக்க முடிந்த உங்களால் உள்ளே அழைத்து செல்ல முடியாதா?


இதற்கு முன்பு இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் யார் என்றே தெரியாது , ஆனால் சேகர்பாபு அவ்வாறல்லாமல் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவேஅறநிலையத்துறை வேடிக்கை பார்க்கலமா, இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்


சிவ பெருமான் ஏர் ஓடுகிறாரா? சாமி வந்து விவசாயம் செய்கிறதா? கோவில்களுக்கு  சொந்தமான நிலங்களை நிலம் இல்லாத ஏழைகளுக்கு தர வேண்டும் என்று கூறினார்.