CM Salem Visit: டெல்டா மாவட்டங்களுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம்... இன்று சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையினை வரும் 12 ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

Continues below advertisement

சேலம் மாவட்டத்தில் முடிவற்ற பணிகள் மற்றும் மேட்டூர் அணை திறந்து வைத்ததற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் வருகை தர உள்ளார். சேலம் வருகை தரும் முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பதற்காக திமுகவினர் தயாராகி வருகின்றனர். முன்னதாக இன்று சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு சேலம் கிழக்கு, சேலம் மத்திய மற்றும் சேலம் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளைக் கழகச் செயலாளர்கள் பங்கேற்கும் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

Continues below advertisement

இதனைத் தொடர்ந்து 11 ஆம் தேதி (நாளை) காலை சேலம் மாநகர் அண்ணா பூங்கா அருகே சேலம் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முழு திரு உருவ சிலையை திறந்து வைக்க உள்ளார். பின்னர், அண்ணா பூங்கா அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி நிர்வாக துறை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு நகர பேருந்து நிலையம், வணிக வளாக கட்டிடம், பெரியார் பேரங்காடி, நேரு கலையரங்கம், வஉசி பூ மார்க்கெட் உள்ளிட்ட பல கட்டிடங்களை நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து திறந்து வைக்க உள்ளார்.

சேலம் நகர பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நகர பேருந்து நிலையம் எனவும், நேரு கலையரங்கத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 நேரு கலையரங்கம் எனவும், போஸ் மைதானத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா 2023 போஸ் மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் 50,000 பயனாளிகளுக்கு ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பின்னர், புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு சட்டக் கல்லூரி மற்றும் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட முடிவற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து, வருகின்ற திங்கட்கிழமை (12 ஆம் தேதி) காலை 9 மணி அளவில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 90 வது ஆண்டாக மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் தமிழகத்தின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். 1942 முதல் 1945 ஆம் ஆண்டு வரை மே மாதத்தில் திறக்கப்பட்ட மேட்டூர் அணை, இந்திய சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு 77 ஆண்டுகளுக்குப் பின்னர், மே மாதத்தில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதம் 12 ஆம் தேதி குறுவை சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். இதுவரை ஜூன் மாதத்தில் 12 ஆம் தேதிக்கு முன்பாக 11 முறையும், நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு பின்னர் 60 முறையும், ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு முன்பாக 18 முறைகள் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூன் மாதம் 12 ஆம் தேதி 61 வது முறை திறக்கப்பட உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola