கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் விவசாயம் பெரியளவில் பாதிக்கப்படும் என்பதால் தமிழக அரசு கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்ற பிறகு, கர்நாடக அரசு மேகதாது அணை விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டசபையில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டடக்கூடாது என்றும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்துக்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த அனைத்துக்கட்சி கூட்ட தீர்மானத்தை மத்திய அரசிடம் நேரில் ஒப்படைக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., பா.ம.க., வி.சி.க., கொ.ம.தே.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று டெல்லி செல்ல உள்ளனர். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இந்த குழு இன்று டெல்லி செல்கிறது. இந்த குழுவினருடன் பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனர். இந்த குழுவினர் அனைவரும் விமானம் மூலமாக இன்று மதியம் 1 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லி செல்கின்றனர்.
டெல்லி சென்ற பிறகு அவர்கள் அனைவரும் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ஷெகாவத்தை நேரில் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பின்போது, கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்துவதுடன், அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் நேரில் அளிக்க உள்ளனர். மேலும், மேகதாது அணையால் தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கமாக கூற திட்டமிட்டுள்ளனர்.
ஜல்சக்தித்துறை அமைச்சரை சந்தித்த பிறகு, அனைத்துக்கட்சி குழு உறுப்பினர்களும் நாளை மாலை பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, அனுமதி கோரப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்தவுடன் பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளனர். பிரதமருடனான சந்திப்பின்போதும் கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்த உள்ளனர். நேற்று முன்தினம் மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.