தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் இடையே நீண்ட காலமாக காவிரி நீர் பங்கீடு குறித்த பிரச்சினை உள்ளது. இந்த நிலையில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் அணை கட்டுவதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சூழலில், மேகதாது அணை விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக சென்னை, தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதியை பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப்பணியையும் மேற்கொள்ள கூடாது. அதை தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும் எனவே கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எந்தவிதமான அனுமதியையும் வழங்க கூடாது என ஒன்றிய அரசை கேட்டுக் கொள்வதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என இரண்டாவது தீர்மானமும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிரொப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் நிலுவகையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சிகள் சார்பில் கருத்துகள் கேட்கபப்ட்டது. இதில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக அணைகட்டும் கர்நாடக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழ்நாடு அரசு தொடர வேண்டும் என்ற கருத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் முன்வைத்தார். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எல்லா நடவடிக்கைகளுக்கும் தங்கள் ஆதரவு உண்டு என சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
மேகதாது அணை கட்டக்கூடாது என்ற கருத்தை முன்வைத்துள்ளதாகவும், காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான முன்னெடுப்பை முதலில் எம்ஜிஆர் எடுத்திருந்தாகவும், காவிரி நதிநீரை பெற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததாகவும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக பாஜகவை பொறுத்தவரை தமிழ்நாடு மாநில மக்கள் நலனையே பார்ப்பதாகவும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு எனவும் இதனை பிரதமரிடம் வலியுறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாவதால் அது கர்நாடகாவிற்கு மட்டும் சொந்தமல்ல, கர்நாடகாவிற்கு எவ்வுளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை தமிழகத்திற்கும் உள்ளது. அனைத்து கட்சிகளும் தமிழக அரசின் நிலைப்பாடுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கர்நாடக சட்டத்தை மீறி அணை கட்டினால் நீதிமன்றம் மூலம் அதற்கு தீர்வு காணவேண்டும் என காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்